கிராமங்களில் ஆதார் அட்டை விழிப்புணர்வுப் பேரணி: வருவாய் துறைக்கு ஆட்சியர் உத்தரவு

கிராமங்களில் ஆதார் அட்டை விழிப்புணர்வுப் பேரணி: வருவாய் துறைக்கு ஆட்சியர் உத்தரவு
Updated on
1 min read

ஆதார் அட்டை தொடர்பாக கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று வருவாய்த் துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். ஆதார் அட்டை எண்களை வாக்காளர் பட்டியலில் இணைக்க இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கான பணிகளை காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ள நிலையில், மாவட்டத்தில் 27.23 சதவீதம் பேர் ஆதார் அட்டைக்கு விண்ணப் பிக்காமல் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, கிராமப் பகுதிகளில் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிப்பது மற்றும் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

தேர்தல் பணி மற்றும் ஆதார் அட்டை பணிகளை மேற்கொண்டு வரும் வருவாய்த் துறையினர் ஒன்றிணைந்து, மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் கிராமப் பகுதிகளில் விழிப்புணர்வுப் பேரணி நடத்தவும், விளம்பரப் பதாகை அமைக்கவும் மாவட்ட ஆட்சியர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், தற்போது பொதுத் தேர்வு நடைபெற்று வருவதால் விழிப்புணர்வுப் பேரணியில் பள்ளி மாணவ- மாணவர்களை ஈடுபடுத்து வதில் கவனத்துடன் ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து மறுவாழ்வு மற்றும் நிவாரணத் துறை அலுவலர் ஏகாம்பரம் கூறியதாவது:

ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்காமல் உள்ள கிராமங்களைக் கண்டறிந்து அப்பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், கிராமப் பகுதிகளில் ஆதார் அட்டைக்காக சிறப்பு முகாம்கள் நடத்துமாறு, ஆதார் அட்டை வழங்கும் பணிகளை மேற்கொண்டுள்ள தனியார் நிறுவனத்திடம் கேட்டுள்ளோம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in