Published : 26 Mar 2015 09:20 AM
Last Updated : 26 Mar 2015 09:20 AM

10-ம் வகுப்பு தேர்வு எழுத 8 பேருக்கு அனுமதி மறுத்ததாக புகார்: அனைத்து தனியார் பள்ளிகளிலும் ஆய்வுக்கு ஆட்சியர் உத்தரவு

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில், 10-ம் வகுப்பு மாணவர்கள் 8 பேருக்கு பொதுத் தேர்வில் பங்கேற்க ஹால் டிக்கெட் வழங்கப்படவில்லை என்று மாணவர்களின் பெற்றோர் நேற்று புகார் கூறினர்.

இதையடுத்து, மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு மாவட்ட கல்வித் துறைக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

இந்தப் பள்ளி மாணவர்கள் தினகரன், பிரபு, பிரேம்சாய், ராஜேஷ், ரஞ்சித்குமார், ரவிக் குமார், ஆர்யா, யோகேஷ் ஆகிய 8 பேரும், அரையாண்டுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதாக வும், பள்ளிக்கு முறையாக வர வில்லை என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து, பள்ளி நிர்வாகத்தி னர், அந்த 8 மாணவர்களுக்கும் பொதுத் தேர்வில் பங்கேற்க ஹால் டிக்கெட் வழங்க மறுத்துவிட்டதாக அவர்களது பெற்றோர் நேற்று புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்து பெற்றோர்கள் கூறும்போது, ‘அரையாண்டுத் தேர்வில் மாணவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்ததால், பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறமாட்டார்கள் என்றும், இதனால், பள்ளியின் தேர்ச்சி சதவீதம் குறையும் என்றும் கூறி, மாற்றுச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளுமாறு பள்ளித் தரப்பில் அறிவுறுத்தினர். ஆனால், நாங்கள் மாற்றுச் சான்றிதழ் பெற மறுத்துவிட்டோம். இந்த நிலையில், மாணவர்கள் 8 பேரையும் பொதுத் தேர்வு எழுத பள்ளி நிர்வாகத்தினர் அனுமதி மறுத்து ஹால் டிக்கெட் தரவில்லை. இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரிடம் புகார் தெரிவித்துள்ளோம் என்றனர்.

தனியார் பள்ளி நிர்வாகத் தரப்பில் கூறும்போது, ‘அந்த மாணவர்கள் தேர்வுக்கு முன்பே பள்ளிக்கு வருவதை நிறுத்திவிட்டனர். ஹால் டிக்கெட் கொடுக்க மறுத்ததாகவும், மாற்றுச் சான்றிதழ் பெற்றுச் செல்லுமாறும் கூறிய புகாரில் உண்மையில்லை’ என்றனர்.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி கூறும்போது, ‘செங்கல்பட்டு மண்டல கல்வி அலுவலரிடம் பள்ளிக்கு நேரில் சென்று, வருகைப் பதிவேடு உள்ளிட்ட விவரங்கள் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளேன். அதன்பிறகே உண்மை தெரிய வரும்.

இந்த விவகாரம் தொடர்பாக தேர்வு தொடங்குவதற்கு முன்னரே புகார் தெரிவித்திருக்கலாம். திடீரென இப்போது புகார் அளித் துள்ளனர்.

அந்த 8 மாணவர்களும் எஞ்சிய தேர்வுகளில் பங்கேற்கலாம். அவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்க பள்ளி நிர்வாகம் தயாராக உள்ளது’ என்றார்.

ஹால் டிக்கெட் மறுப்பா?

ஆட்சியர் சண்முகம் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

செங்கல்பட்டில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் மறுக்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் மாணவர்கள் யாருக்கேனும் ஹால் டிக்கெட் மறுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு மாவட்ட கல்வித் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு ஆட்சியர் சண்முகம் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x