காவிரியின் குறுக்கே அணை கட்டுவதை எதிர்த்து முற்றுகை: தடையை மீறி புறப்பட்ட விவசாயிகள் கைது - தமிழக எல்லையில் போலீஸ் குவிப்பு

காவிரியின் குறுக்கே அணை கட்டுவதை எதிர்த்து முற்றுகை: தடையை மீறி புறப்பட்ட விவசாயிகள் கைது - தமிழக எல்லையில் போலீஸ் குவிப்பு
Updated on
1 min read

கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதை எதிர்த்து மேகேதாட்டுவை முற்றுகையிட தேன்கனிக்கோட்டையிலிருந்து தடையை மீறி புறப்பட்ட காவிரி உரிமை மீட்புக் குழுவினரை போலீஸார் கைது செய்தனர்.

கர்நாடக அரசு, காவிரியின் குறுக்கே மேகேதாட்டு மற்றும் ராசி மணல் ஆகிய இரு இடங்களில் புதிய அணை கட்டும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளது. இதற்கு தமிழகத்தில் உள்ள விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து காவிரி உரிமை மீட்புக் குழு அமைக்கப்பட்டு, டெல்டா பகுதி விவசாயிகளிடம் ஆதரவு திரட்டப்பட்டது. இந்த அமைப்பினர் காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுவதை எதிர்த்துப் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுவதை மத்திய அரசு தடுக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்குமுறை குழுவை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி உரிமை மீட்புக் குழுவினர் நேற்று மேகேதாட்டுவை முற்றுகையிட முடிவு செய்தனர். இதற்கு மதிமுக, மமக, தமிழக விவசாயிகள் சங்கம், ஐஜேகே, பாமக, தமிழ் தேசிய பேரியக்கம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன.

அதன்படி தமிழகம் முழுவதிலுமிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று முன்தினம் இரவு முதலே கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டைக்கு வர தொடங்கினார். முன்னதாக முற்றுகை போராட்டம் நடத்த மாவட்ட காவல்துறை அனுமதி மறுத்தது. இருப்பினும் தடையை மீறி முற்றுகையிட போவதாக அறிவித்தனர்.

நேற்று காலை தேன்கனிக் கோட்டை மணிக்கூண்டு முன்பு காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங் கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமையில் மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், பெண்கள், குழந்தைகளுடன் ஜவளகிரி சாலை வழியாக மேகேதாட்டுவை நோக்கி பேரணியாக புறப்படத் தயாராகினர்.

கோவை சரக ஐஜி சங்கர் தலைமையில் 850-க்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பேரணியாக சென்ற விவசாயிகளை போலீஸார் தடுத்து நிறுத்தினர். தடுப்பை மீறி செல்ல முயன்ற விவசாயிகள், பெண்கள், குழந்தைகளை போலீஸார் கைது செய்தனர். மொத்தம் 94 பெண்கள் உட்பட 1265 பேரை போலீஸார் கைது செய்தனர். இதனால் மாநில எல்லையில் பரபரப்பு ஏற்பட்டது.

நடவடிக்கை வேண்டும்

முன்னதாக ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டப்படும் என்று அம்மாநில சட்ட அமைச்சர் ஜெயச்சந்திரா தெரிவித்தார். ஆனால் அவரது கருத்துக்கு கர்நாடக அரசும் மறுக்கவில்லை. தமிழக அரசும் கண்டிக்கவில்லை. தமிழக அரசு இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி கர்நாடகத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி, பிரதமரை சந்தித்து தீர்வு காண வேண்டும் எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in