Published : 14 Mar 2015 04:15 PM
Last Updated : 14 Mar 2015 04:15 PM

நிலம் கையகப்படுத்தும் மசோதாவில் அதிமுக பாஜகவை ஆதரிக்கும் பின்னணி என்ன?- கருணாநிதி விளக்கம்

செயற்கையாக என்ன சமாதானம் கூறினாலும், அதிமுக நிலம் கையகப்படுத்தும் மசோதாவில் பாஜக வை ஆதரித்ததற்கான அடிப்படைக் காரணத்தை மறைக்க முடியாது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''யாரும் எதிர்பாராத வகையில் இந்த மசோதாவுக்கு அதிமுக முழு ஆதரவு அளித்துள்ளது. மக்களவையில் வாக்கெடுப்பு நடக்கும்போது அனைத்து அதிமுக எம்.பி.க்களும், அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டுமென்று கட்சி மேலிடம் உத்தரவிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

தந்தை பெரியார் அவர்கள்தான் அடிக்கடி "பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது" என்ற சொற்றொடரைப் பயன்படுத்துவார்கள். அதை மீண்டும், மீண்டும் நினைவுக்குக் கொண்டு வரும் வகையில் தான் அதிமுக வின் செயல்பாடுகள் உள்ளன. நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் இரண்டு நாள் விவாதத்துக்குப் பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. மசோதா வாக்கெடுப்புக்கு வந்த போது காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம், தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆகியவை வெளி நடப்பு செய்தன. சிவசேனா வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் இந்த மசோதாவுக்கு அதிமுக முழு ஆதரவு அளித்துள்ளது. மக்களவையில் வாக்கெடுப்பு நடக்கும்போது அனைத்து அதிமுக எம்.பி.க்களும், அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டுமென்று கட்சி மேலிடம் உத்தரவிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலம் கையகப்படுத்தும் சட்டம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்திலேயே 2013ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதன்படி விவசாய நிலத்தை கையகப்படுத்தும் முன் எண்பது சதவிகித விவசாயிகளின் ஒப்புதல் பெற வேண்டும் என்று உள்ளது. மேலும் நிலத்தைக் கையகப்படுத்தும்போது, அந்த நிலம் விவசாயம் செய்வதற்குத் தகுதி வாய்ந்த நிலமா என்பது கவனிக்கப்பட வேண்டுமென்று முன்பிருந்த சட்டத்தில் கூறப்பட்டிருந்தது. இப்போது கொண்டு வரப்படும் அவசரச் சட்டத்தில், குறிப்பிட்ட ஐந்து அமைப்புகளுக்கு நிலத்தைக் கையகப்படுத்தும் போது, அந்த நிலம் விவசாயம் செய்கின்ற நிலமா என்பதைப் பார்க்கத் தேவையில்லை என்று உள்ளது. இந்த முடிவு பாஜக அரசு விவசாயிகளுக்கு எதிராகவும், தொழிலதிபர்களுக்கும், பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கும் ஆதரவாகவும் செயல்படுகிறது என்பதை நிச்சயமாக உறுதி செய்து விடும். எந்தத் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படுகிறதோ, அந்தத் திட்டம் ஐந்தாண்டுகளில் நிறைவேற்றப்படாவிட்டால், அந்த நிலத்தை விவசாயி களுக்கே திரும்பத் தந்து விட வேண்டும் என்பது முந்தைய சட்டத்தில் உள்ளது.

இரட்டை வேடம் ஏன்?

அதிமுக வைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது மக்களவையில் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளி நடப்பு செய்ததோடு, அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா இந்த மசோதா பற்றி வலியுறுத்திய கருத்துகள் என்ற முகவுரையோடு 29-8-2013 அன்று நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவராக இருந்த தம்பிதுரை இதே நிலம் கையகப்படுத்தும் சட்டம் பற்றி என்ன பேசினார் தெரியுமா?

நில உரிமையாளர்களின் ஒப்புதலைப் பெறுவதற்கு அவர்களோடு தனியே பேச்சுவார்த்தை நடத்தி ஒப்புதலைப் பெற வேண்டும். மத்திய அரசோ அல்லது மாநில அரசோ பொது நோக்கத்திற்காக நில எடுப்பு செய்வது சரிதான்; ஆனால் தனியார் நிறுவனங்களுக்காக நில எடுப்பு செய்யக் கூடாது. நில எடுப்பு செய் வதற்குத் தகுதியான அரசு, மாநில அரசு தான், மத்திய அரசு அல்ல; ஏனெனில் "நிலம்" என்ற பொருள் மாநில அரசுப் பட்டியலில் தான் உள்ளது. ஆனால் இந்த மசோதாவின் மூலம் மத்திய அரசு மாநில அரசின் உரிமையில் தலையிடுகிறது. மாநில அரசு பொது நோக்கங்களுக்காக நில எடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும்போது சமூகத் தாக்கம் பற்றிய மதிப்பீடு (Social Impact Assessment) ) தேவையில்லை. அவசர நோக்கங்களுக்காக நில எடுப்பு செய்வதற்குச் சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மசோதா 13 சட்டங்களுக்கு விதி விலக்கு அளித்துள்ளது. அத்தகைய விதி விலக்கில் இருந்து பெட்ரோலியம் மற்றும் தாதுப் பொருள்களுக்கான குழாய் அமைக்கும் பணி விலக்கப்பட வேண்டும். தமிழக அரசின் நெடுஞ்சாலைச் சட்டம் 2001 தொழிற்சாலைகளுக்கான நில எடுப்புச் சட்டம் 1999 ஆகியவற்றுக்கு இந்த மசோதா பாதுகாப்பு அளித்திட வேண்டும். நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கும்போது 12 சதவிகித வட்டி என்பதற்குப் பதிலாக 15 சதவிகித வட்டி வழங்க வேண்டும்" என்றெல்லாம் அதிமுக சார்பில் நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவிற்கு எதிராகப் பேசப் பட்டது.

இப்படிப் பேசியதையெல்லாம் மறந்து விட்டு அல்லது மறைத்து விட்டு ஏதோ அன்று சுட்டிக் காட்டிய குறைகள் அனைத்தும் இன்று நிவர்த்தி செய்யப்பட்டு விட்டதைப் போல, தற்போது நாடாளுமன்றத்தில் அதிமுக உறுப்பினர்கள்பாஜக அரசு கொண்டு வந்த திருத்தங்களையெல்லாம் ஆதரித்து இந்த மசோதாவை மக்களவையில் ஆதரித்துள்ளது. இவ்வாறு இந்த இரட்டைவேடம் ஏன் என்று நான் கேட்டதற்குத் தான் ஜெயலலிதா அவருக்கே உரிய நாகரிகமான மொழி நடையில் எனக்குப் பதிலளித்து ஒரு நீண்ட அறிக்கை விடுத்துள்ளார்.

அந்த அறிக்கையில், "தமிழகத்தின் நன்மைக்காகவும், தமிழக மக்களின் நன்மைக்காகவும் அல்லும் பகலும் அயராது பாடுபடும் அதிமுக தமிழகத்தின் நன்மைக்காகவே நில எடுப்பு திருத்த மசோதாவை மக்களவையில் ஆதரித்தது"என்று விளக்கமளித்திருக்கிறார்.

"பொதுத்துறை பங்குகளை விற்பனை செய்வதை அ.தி.மு.க. ஒரு போதும் ஏற்காது" என்று மக்களவைத் தேர்தலின்போது உறுதி அளித்து விட்டு, பாஜக அரசு கொண்டு வந்துள்ள காப்பீட்டு மசோதாவின் மூலம் அன்னிய முதலீட்டின் உச்ச வரம்பு 49 சதவிகிதமாக உயர்த்தப்படுவதை மறந்து விட்டு அதை ஆதரிப்பதற்கு முன் வந்தது தான் தமிழக மக்களின் நன்மைக்கான காரியமா?

காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் அனைத்தும் எதிர்ப்பது மக்களுக்கு எதிரான காரியமா?

29-8-2013 அன்று அதே நாடாளுமன்றத்தில் இதே மசோதா மீது சண்டமாருதம் செய்து பேசி விட்டு அவையிலிருந்தே வெளி நடப்பு செய்தது ஏன்? 2013இல் மசோதாவுக்கு அதிமுக எதிர்ப்பு - 2015இல் மசோதாவுக்கு அதிமுக ஆதரவுஏன் இந்த இரட்டை நிலை? சொத்துக் குவிப்பு வழக்கு மேல் முறையீட்டின் மீது இப்போது தானே விசாரணை முடிந்திருக்கிறது; எனவே தான் இந்த நிலை என்றுபதில் கூறுவார்களோ?

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உணவு பாதுகாப்பு மசோதாவைக் கொண்டு வந்த போது அதிலிருந்த நன்மைகளையெல்லாம் மறைத்து விட்டு அரசியல் காரணங்களுக்காக அதனை எதிர்த்த அதிமுக தற்போது பாஜக அரசின் உணவுப் பாதுகாப்பு சட்டத்தை ஆதரிப்பதற்கு என்னபெயர்? இரட்டை நிலை தானே?

பாஜக இந்த மசோதாவில் கொண்டு வந்த ஒன்பது திருத்தங்களில் ஒன்று அதிமுக வின் முடிவு என்றும், அதனால் தான் இந்தச் சட்டத் திருத்த மசோதாவிற்கு அதிமுக ஆதரவளித்தது என்றும் ஜெயலலிதா வக்காலத்து வாங்குகிறார்.

நான் விடுத்த அறிக்கை ஒன்றில், "இந்தச் சட்டத் திருத்தங்களை முதலில் தீவிரமாக எதிர்த்த அ.தி.மு.க. என்ன காரணத்தாலோ ஏதோவொரு உள்நோக்கத்தோடு திடீரென்று ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளது" என்று குறிப்பிட்டதால்தான் ஜெயலலிதா பதில் அளித்திருக்கிறாராம்.

அதிமுக வின் இரட்டை நிலை பற்றி நான் மட்டுமல்ல; தமிழ்நாட்டில் உள்ள அத்தனை நாளேடுகளும், அரசியல் தலைவர்களுமே, இந்த மசோதாவை அதிமுக ஏற்கனவே எதிர்த்ததையும், பா.ஜ.க.வின் தோழமைக் கட்சிகளாக இருந்தவைகள் கூட, ஆதரிக்காத நிலையில் தற்போது விழுந்தடித்துக் கொண்டு, இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் ஆதரித்தது பற்றியும் விளக்கமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

வலிய சென்று ஆதரிக்கும் அதிமுக

தமிழக விவசாயிகள் தம்மை அதிமுக வஞ்சித்து விட்டது என்பதைப் புரிந்து கொண்டு விட்டார்கள். எனவே ஜெயலலிதா என் மீது கோபப்பட்டுப் பயனில்லை. பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கில் மேல் முறையீட்டு மனுவின் மீதான தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில்,அதிமுக இந்த மசோதாவை வலியச் சென்று ஆதரிக்கும் என்பது, தமிழ்நாட்டில் உள்ள சிறு பிள்ளைகளைக் கேட்டால் கூட தெரிந்த கதை தானே என்பார்கள்!

இதைச் சமாளிக்கவும், ஏற்பட்டு விட்ட ஆழமான புண்ணுக்குப் புணுகு தடவிடவும்ஜெயலலிதா இவ்வளவு பெரிய அறிக்கை விட்டு, "எங்கப்பன் குதிருக்குள் இல்லை"என்பதைப் போல தன்னை வெளிப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை;

விவசாயிகளின் மன உளைச்சலை மேலும் அதிகப்படுத்திடும் வகையில் தான், ஜெயலலிதாவின் அறிக்கை உள்ளது. நாடாளுமன்றத்தில் இந்த மசோதா மீதான விவாதத்திற்குப்பதிலளிக்க வேண்டிய அமைச்சர் கூட, ஜெயலலிதா அறிக்கையிலே தெரிவித்துள்ள இத்தனை கருத்துகளைத் தெரிவிக்கவில்லை. அந்த அளவுக்குவிவசாயிகளின் நலன்களுக்கெதிரான பாஜக அரசின் மசோதாவுக்கு ஆதரவாக விளக்கமளித்துள்ளார்.

செயற்கையாக என்ன சமாதானம் கூறினாலும், அதிமுக நிலம் கையகப்படுத்தும் மசோதாவில் பாஜக வை ஆதரித்ததற்கான அடிப்படைக் காரணத்தை மறைக்க முடியாது.

பூனைக்குட்டி வெளியே வந்துவிட்ட உண்மை உலகத்திற்கு நன்றாகவே புரியும்'' என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x