Published : 02 Mar 2015 11:29 AM
Last Updated : 02 Mar 2015 11:29 AM

ராணிப்பேட்டை அருகே 850 இலவச மின் விசிறிகள் தீயில் எரிந்து சேதம்: மிக்ஸி, கிரைண்டர்கள் தப்பின

ராணிப்பேட்டை அருகே தமிழக அரசு சார்பில், பயனாளிகளுக்கு வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட மின் விசிறிகள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு சார்பில் விலையில்லா மின் விசிறி, மிக்ஸி மற்றும் கிரைண்டர் வழங்கப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த காரை மற்றும் நவ்லாக் ஊராட்சிப் பகுதியில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக ஆந்திர மாநிலத்தில் இருந்து 3 கன்டெய்னர் லாரிகளில் 850 மின் விசிறிகள், 850 மிக்ஸி, 740 கிரைண்டர்கள் தனித்தனியாக சிப்காட் பகுதிக்கு நேற்று அதிகாலையில் கொண்டு வரப்பட்டன.

கொசுவத்திச் சுருளால் தீ

அந்த 3 லாரிகளும், ராணிப்பேட்டை அருகே உள்ள சிப்காட் உயர்நிலைப் பள்ளி அருகே வரிசையாக நிறுத்தப்பட்டன. இதில், மின் விசிறி லோடு ஏற்றி வந்த சென்னையைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பாலசந்தர் (47) என்பவர், தனது லாரியில் கொசுவத்திச் சுருள் ஏற்றி வைத்துவிட்டு, தூங்கியுள்ளார். அதிகாலை 3 மணியளவில் தன் மீது தீ வெப்பம் சுடுவதை உணர்ந்த அவர், கண்விழித்தபோது, கன்டெய்னர் லாரியில் தீப்பற்றி எரிவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

ரூ.15 லட்சம் சேதம்

இதுபற்றி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே ராணிப்பேட்டை, சிப்காட் பகுதியில் இருந்து 3 வாகனங்களில் வந்த தீயணைப்புப் படையினர், தண்ணீரை பீய்ச்சி அடித்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் கன்டெய்னர் லாரியில் அட்டைப் பெட்டிகளில் இருந்த 850 மின் விசிறிகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.15 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

இதுறித்து தகவல் கிடைத்ததும் வாலாஜா வட்டாட்சியர் மணிலா மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினர். மிக்ஸி மற்றும் கிரைண்டர் லோடு ஏற்றி வந்த லாரிகள் உடனடியாக சிப்காட் உயர்நிலைப் பள்ளியில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சிப்காட் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x