

சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் முனையத்தில் கூடுதலாக 2 நடைமேடைகள் அமைக்கப்படுகின்றன. இப்பணியை வரும் ஜூன் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், ரயில்களை விரைவாக இயக்க முடியும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து ஆவடி, பட்டாபிராம் மிலிட்டரி சைடிங், திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, திருப்பதி, வேலூர், கும்மிடிப்பூண்டி, சூளூர்பேட்டை ஆகிய ஊர்களுக்கு புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன்படி, நாள்தோறும் 175-க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.
இவற்றில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கின்றனர். அண்மைக்காலமாக ரயிலில் வருபவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். பேசின்பிரிட்ஜ்-சென்ட்ரல் இடையே ரயில்கள் மிகவும் தாமதமாக இயக்கப்படுவதே இதற்குக் காரணம். அரக்கோணம், திருவள்ளூரில் இருந்து வரும் ரயில்கள் பேசின்பிரிட்ஜ் வரை சரியான நேரத்துக்குள் வந்து சேர்ந்துவிடுகின்றன. அதன் பிறகு, சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடைய காலதாமதம் ஏற்படுகிறது.
சென்ட்ரல் புறநகர் ரயில் முனையத்தில் போதிய நடைமேடை வசதி இல்லை. தற்போது 3 நடைமேடைகள் மட்டுமே உள்ளதால், ரயில்களை குறித்த நேரத்தில் இயக்குவதில் ரயில்வே நிர்வாகத்துக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.
இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விதமாக, ரயில்வே நிர்வாகம் தற்போது கூடுதலாக 2 நடைமேடைகளை அமைக்கும் பணியைத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
சென்ட்ரல் புறநகர் ரயில் முனையத்தில் தற்போது 3 நடைமேடைகள் மட்டுமே உள்ளதால் ரயில்களை குறித்த நேரத்தில் இயக்குவதில் பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து, ரூ.30 கோடி செலவில் கூடுதலாக 2 நடைமேடைகளை அமைக்க தீர்மானிக்கப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. வரும் ஜூன் மாதத்துக்குள் இப்பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் புறநகர் மின்சார ரயில்களை விரைவாக இயக்க முடியும்.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.