Published : 28 Mar 2015 09:26 AM
Last Updated : 28 Mar 2015 09:26 AM

கோத்தகிரியில் பிடிபட்ட கரடி விடுவிப்பு

கோத்தகிரி அருகே பிடிபட்ட பெண் கரடி நேற்று அதிகாலை சீகூர் சரகத்துக்கு உட்பட்ட ஆடிகொம்பை வனத்தில் விடுவிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள கேர்பென் தொட்டமொக்கை பகுதியில் கடந்த 23-ம் தேதி மாலை தேயிலை தோட்டத்தில் மாதி (40) என்ற பெண்ணை கரடி தாக்கிக் கொன்றது. மாதியை மீட்க முயன்ற கணவர் ஆலன், மகன் தினகரன் மற்றும் உறவினர் குமார் ஆகியோரையும் கரடி தாக்கியது. படுகாயமடைந்த அவர்கள் கோத்தகிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், ஆலன் மற்றும் குமார் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந் நிலையில், கடந்த 24-ம் தேதி தொட்டமொக்கையில் கரடி சுட்டுக்கொல்லப்பட்டது.

கரடி தாக்கி படுகாயமடைந்த வனவர் ஸ்டேன்லி மற்றும் காவலர் கருணாமூர்த்தி ஆகியோருக்கு கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கரடி தாக்கியதில் சிகிச்சை பெற்று வந்த ஆலன் உயிரிழந்தார்.

தேடுதல் வேட்டை

மேலும் ஒரு பெண் கரடி, இரு குட்டிகளுடன் அப் பகுதியில் வலம் வருவதால் அவற்றையும் பிடிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து கூண்டு வைக்கப்பட்டு, கண்காணிப்புக் கேமரா பொருத்தப்பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சுமார் 7.30 மணியளவில் தொட்டமொக்கையிலிருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ள அரவேணு பகுதியில் ஒரு பெண் கரடி நடமாட்டத்தைக் கண்ட வனத்துறை கால்நடை மருத்துவர் மனோகரன், அதற்கு மயக்க ஊசி செலுத்தினார். மயக்கமடைந்த பெண் கரடியை வனத் துறையினர் கூண்டில் அடைத்து, வாகனத்தில் ஏற்றி வடக்கு வனக் கோட்டத்துக்கு உட்பட்ட சீகூர் சரகத்தில் ஆடிகொம்பை வனப் பகுதியில் நேற்று அதிகாலை சுமார் 1.30 மணியளவில் விடுவித்தனர்.

கரடிகள் வசிப்பதற்கு ஏதுவான சூழ்நிலை சீகூரில் நிலவுவதால், இந்த இடம் தேர்வு செய்யப்பட்டு கரடி விடுவிக்கப்பட்டதாக கோவை வனத்துறை கால்நடை மருத்துவர் மனோகரன் தெரிவித்தார்.

நீலகிரியில் கடந்த சில காலமாக வன விலங்குகள் மனிதர்களை தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பாட்டவயலில் ஒரு புலியும், தொட்டமொக்கை பகுதியில் ஒரு கரடியும் சுட்டுக்கொல்லப்பட்டன. மனித-விலங்கு மோதலைத் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

கோத்திகிரி அருகேயுள்ள கோடநாட்டில் இரு சிறுத்தைகள் பிடிக்கப்பட்டு, அவலாஞ்சியில் விடுவிக்கப்பட்டன. தற்போது கரடி பிடிக்கப்பட்டு சீகூரில் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப் பகுதிகளில் ஏற்கெனவே உள்ள விலங்குகளுக்கும் தற்போது விடுவிக்கப்பட்ட விலங்குகளுக்கும் வசிப்படம் தொடர்பாக மோதல் ஏற்படும் என்கிறார் நீலகிரி இயற்கை மற்றும் கலாச்சார அறக்கட்டளை நிர்வாகி சிவதாஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x