

கட்சிக்காக உழைப்பவர்களை எல்லாம் நீக்கினால் தேர்தலை எப்படி சந்திக்க முடியும் என திமுக தலைமையிடம் மு.க.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரையில் திமுக பிரமுகர்களான ராமலிங்கம், ராஜேந்திரன் இல்லத் திருணவிழா ராஜா முத்தையா மன்றத்தில் புதன் கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்று மு.க அழகிரி பேசியதாவது:
என்னை நம்பி எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களில் ராமலிங்கமும் ராஜேந்திரனும் அடங்குவர். இன்று பல சோதனைகள் வந்தாலும் எனக்கு பக்கபலமாக அவர்கள் இருந்து வருகின்றனர். பாவம் அவர்கள் பதவி இழந்து நிற்கிறார்கள்.
எந்த தவறுமே செய்யாமல் அவர்கள் பதவியை இழந்துள்ளது வருத்தப்படக்கூடிய ஒன்றாகும்.
யாரோ ஒருவர் போஸ்டர் அடித் தார் என்பதற்காக பலரது பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன. இதுபற்றி நியாயம் கேட்கச் சென்றேன். என்னுடைய பதவியையும் பறித்து, கட்சியை விட்டே நீக்கிவிட்டார்கள். மு.க.அழகிரி பேட்டியை தொலைக்காட்சியில் பாருங்கள் என போஸ்டர் ஒட்டியதற்காக ஒருவரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளனர். அதைவிடக் கொடுமை எந்த போஸ்டருமே ஒட்டாத உதயகுமாரின் தம்பி பாலாஜியையும் கட்சியிலிருந்து நீக்கிவிட்டார்கள்.
கட்சிக்காக உழைப்பவர்களை எல்லாம் இப்படி நீக்கினால் எப்படி தேர்தலை சந்திக்க முடியும் என்பதை இந்தத் திருமண நிகழ்ச்சி மூலம் தலைமைக்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன்’’ இவ்வாறு மு.க அழகிரி பேசினார்.