என்.ஆர். காங். கூட்டத்தில் பங்கேற்பு: புதுச்சேரி காங். எம்எல்ஏக்கள் இருவர் கட்சி தாவுகிறார்களா?

என்.ஆர். காங். கூட்டத்தில் பங்கேற்பு: புதுச்சேரி காங். எம்எல்ஏக்கள் இருவர் கட்சி தாவுகிறார்களா?
Updated on
1 min read

புதுச்சேரி ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில், எதிர்க்கட்சியான காங்கிரஸின் எம்எல்ஏக்கள் இருவர் நள்ளிரவில் பங்கேற்றனர். கட்சித்தாவல்தான் இதற்குக் காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. என்.ஆர்.காங்கிரஸ் கட்சித்தலைவரும் முதல்வருமான ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று இரவு 10 மணிக்கு தொடங்கி நள்ளிரவு வரை நடைபெற்றது.

இக்கூட்டம் சட்டப்பேரவை வளாகத்தில் நடந்தது. அப்போது நள்ளிரவை எட்டியபோது காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மல்லாடி கிருஷ்ணாராவ் (ஏனாம்), திருமுருகன் (காரைக்கால்) ஆகிய இருவரும் அங்கு வந்தனர். இதனால் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்குத் தாவுகிறார்களோ என்ற சந்தேகம் எழுந்தது.

அதைத்தொடர்ந்து இன்று காலை சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்றி கொண்டிருந்தபோது, முதல்வர் ரங்கசாமியிடம் சென்று மல்லாடி கிருஷ்ணாராவ் பேசிக்கொண்டிருந்தார்.

இதுதொடர்பாக புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் பேசினார்.

''எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க பிரதேச காங்கிரஸ் தலைவருக்கே அதிகாரம் உள்ளது. அவர்களின் கட்சிப்பொறுப்புகள் பறிக்கப்பட்டு விட்டன. அவர்கள் இருவரும் கட்சியிலே இல்லை. கட்சிக்கூட்டங்கள் தொடர்பாக அவர்களிடம் தகவல் தெரிவிப்பதும் நிறுத்தி விட்டோம். நடவடிக்கை எடுப்பதை விட அலட்சியப்படுத்துகிறோம். கட்சித்தாவுவது இருவருக்கும் வழக்கமானதுதான். அதனால் காங்கிரஸ் கட்சிக்கு பாதிப்பு இல்லை. தவறான முடிவால் ஆளுங்கட்சி பக்கம் இருவரும் சாய்ந்துள்ளனர்'' என்று குறிப்பிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in