தேக்கடியில் வாகன நிறுத்தம் அமைக்கும் விவகாரம்: ஏப்ரல் 7-ம் தேதிக்குள் நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் - பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

தேக்கடியில் வாகன நிறுத்தம் அமைக்கும் விவகாரம்: ஏப்ரல் 7-ம் தேதிக்குள் நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் - பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
Updated on
1 min read

தேக்கடியில் கேரள அரசு வாகன நிறுத்தம் அமைத்துவரும் இடத்தில் நிபுணர் குழு ஆய்வு நடத்தி ஏப்ரல் 7-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்னிந்திய அமர்வு உத்தரவிட்டது.

இடுக்கி மாவட்டம் தேக்கடியில் மிகப்பெரிய வாகன நிறுத்தம் அமைக்கும் பணியை கேரள அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த இடம் புலிகள் பாதுகாப்பு வனப்பகுதிக்கு அருகில் இருப்பதால் வன விலங்குகள் பாதிப்புக்குள்ளாகும். எனவே வாகன நிறுத்தம் அமைக்கும் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கோரி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்னிந்திய அமர்வில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, வாகன நிறுத்த கட்டுமானப் பணிக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ‘வாகன நிறுத்தம் அமைக்கும் பணி நடை பெறும் இடம் தமிழக அரசுக்கு சொந்தமானது. இது முல்லை பெரியாறு அணை யின் நீர்ப்பிடிப்பு பகுதி. இங்கு வாகன நிறுத்துமிடத்தை அமைக்கக் கூடாது’ என்று தமிழக அரசு சார்பில் தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டது. ‘அந்த இடம் வனப்பகுதிக்கு அருகிலும் இல்லை. நீர்ப்பிடிப்பு பகுதியிலும் இல்லை. அது கேரள அரசுக்கு சொந்தமான இடம்’ என்று கேரள அரசு வாதிட்டு வருகிறது.

இதையடுத்து, வாகன நிறுத்து மிடம் அமையவுள்ள இடத்தை இரு நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்துக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்த ஆய்வுக்கான செலவு ரூ.14.60 லட்சத்தை தமிழகம் மற்றும் கேரள அரசுகள் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்னிந்திய அமர்வு அலுவலகத்தில் செலுத்தின.

இவ்வழக்கு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி எம்.சொக்கலிங்கம், தொழில் நுட்பத்துறை உறுப்பினர் பேராசிரியர் ஆர்.நாகேந்திரன் ஆகியோர் முன்பு நேற்று விசார ணைக்கு வந்தது. அப்போது “மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நியமித்துள்ள இரு நபர்கள் கொண்ட நிபுணர் குழு, தேக்கடி பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, ஏப்ரல் 7-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்ட அமர்வின் உறுப்பினர்கள், வழக்கின் அடுத்தகட்ட விசார ணையை ஏப்ரல் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in