Published : 01 Mar 2015 02:50 PM
Last Updated : 01 Mar 2015 02:50 PM

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம்: ஆங்கிலத்தில் சரளமாக பேச பி.எட். மாணவர்களுக்கு பயிற்சி - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் முடிவு

வேலைவாய்ப்புத் திறனை அதிகரிக்கும் வகையில் பி.எட். மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் செயல்படுத்த இருக்கிறது. இதுதொடர்பாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்ய உள்ளது.

தமிழ்நாட்டில் 680-க்கும் மேற்பட்ட கல்வியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் ஏறத்தாழ 70 ஆயிரம் பேர் இளங்கலை கல்வியியல் பட்டப் படிப்பு (பி.எட்.) படிக்கிறார்கள். பிஎட் படிப்பை முடிக்கும் அனைவருக்குமே அரசு வேலைவாய்ப்பு கிடைத்துவிடுவதில்லை. தனியார் பள்ளிகளில் ஆங்கிலவழி வகுப்பு காரணமாக, ஆங்கிலத்தில் நன்கு பேசத்தெரிந்த பிஎட் பட்டதாரிகள்தான் பெரிதும் விரும்பப்படுகிறார்கள். தமிழாசிரியர் கூட ஆங்கிலத்தில் பேசத் தெரிந்திருக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் எதிர்பார்க்கின்றன.

இத்தகைய சூழலில், பிஎட் மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறனை அதிகரிக்கும் வகையில் அவர்களுக்கு ஆங்கிலப் பேச்சுப்பயிற்சி (ஸ்போக்கன் இங்கிலீஷ்) அளிக்கும் திட்டத்தைச் செயல்படுத்த தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் முடிவுசெய்துள்ளது. இதுகுறித்து அதன் துணைவேந்தர் பேராசிரியர் ஜி.விஸ்வநாதன் ‘தி இந்து’ விடம் கூறியதாவது:-

பி.எட். மாணவர்களுக்கு ஆங்கிலப் பேச்சுப்பயிற்சி அளிப்பது தொடர்பாக விரைவில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத் துடன் ஒப்பந்தம் செய்ய உள்ளோம். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் வல்லுநர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேசுவது குறித்து மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பார்கள்.

பொதுவாக, மாணவ-மாணவிகள் அனைவருமே ஆங்கிலத்தில் எழுதுவார்கள். வாசிப்பார்கள். ஆனால், ஆங்கிலத்தில் பேசுவதிலும், ஆங்கிலத்தில் பேசப்படுவதை கவனிப்பதிலும் சிரமப்படலாம். எனவே, பேசும் திறனுக்கும் கவனிக்கும் திறனுக்கும் முக்கியத் துவம் அளிக்கும் வகையில் பயிற்சி அமைந்திருக்கும். இந்த ஆங்கில பேச்சுப்பயிற்சி கட்டாய பாடமாக இல்லாமல் விருப்பம் சார்ந்ததாக இருக்கும். இதற்கான பணிகள் விரைவில் முடிந்துவிட்டால் நடப்பு கல்வி ஆண்டிலேயே பயிற்சி தொடங்கப்பட்டுவிடும். இல்லாவிட்டால் அடுத்த கல்வி ஆண்டில் தொடங்கு வோம்.

இவ்வாறு துணைவேந்தர் விஸ்வநாதன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x