

கைத்தறி நெசவில் கோரா காட்டனுக்கு புவி சார் குறியீடு பெற்ற கோவை நெசவாளர்கள், அடுத்தகட்டமாக அங்கக வேளாண்மையின் அடித்தளத்திலிருந்து, முற்றிலும் இயற்கையான ஆர்கானிக் பருத்திப் புடவையை அறிமுகம் செய்துள்ளனர்.
நெசவாளர்களின் புதிய முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக, கோ-ஆப்டெக்ஸ் தனது முழு ஒத்துழைப்பையும் கொடுத்து ஆர்கானிக் புடவைகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
‘இயற்கையே மூலம்’ என்ற புரட்சி, விவசாயத்தில் தொடங்கி, சங்கிலித் தொடர் போல நாம் பயன்படுத்தும் அனைத்திலும் தடம் பதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவையில் உள்ள வதம்பச்சேரி கிராமத்தில், நெசவாளர்களின் கூட்டு முயற்சியால் செயற்கை கலப்பில்லாத, ஆர்கானிக் புடவைகள் தயாரிக்கப்படுகின்றன. செயற்கை மட்டுமே எளிதில் லாபத்தைத் தரும் என்ற கூற்றை, இந்த நெசவாளர்கள் உடைத்தெறிந்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில், சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட சிறிய கிராமம் வதம்பச்சேரி. அதில் உள்ள சின்ன வதம்பச்சேரி, பெரிய வதம்பச்சேரி கிராமங்களில் ஸ்ரீ நடராசர் பருத்தி கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கம், ஸ்ரீ ராமலிங்க சூடாம்பிகை பருத்தி கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கம் ஆகியவை உள்ளன.
21 நெசவாளர்கள்
தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கம் (கோ-ஆப்டெக்ஸ்) கேட்டுக் கொண்டதற்கு இணங்க, வதம்பச்சேரி கிராம நெசவாளர்கள் 21 பேர் இணைந்து 2 மாதத்தில், 160 ஆர்கானிக் புடவைகளை உருவாக்கியுள்னர்.
முற்றிலும் இயற்கையாக விளைவிக்கப்பட்ட பருத்தி நூலில், இயற்கையாய் விளையும் பூ, இலை, விதை, காய்கறிகள், மரப்பட்டைகள் ஆகியவற்றிலிருந்து தயாரித்த இயற்கை வண்ணங்களே இந்த புடவைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, வண்ணங்களுக்கு, மஞ்சள், சங்குப் பூ, கரிசலாங்கண்ணி கீரை, கருங்காலி மரப்பட்டை, செவ்வாழைப் பூ போன்றவை அதிகளவில் பயன்படுத்தப்படுவதாக கோ-ஆப்டெக்ஸ் தெரிவித்துள்ளது.
இயற்கையான பருத்தி, கர்நாடகத்தில் உள்ள ஹிந்த்பூரில் இருந்தும், இயற்கை சாயம் ஈரோட்டிலிருந்தும் பெறப்படுகிறது. கொளுத்தும் கோடைக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ள இந்த புதிய ரகப் புடவைகள், மிகக் குறுகிய காலத்தில் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்று வருகின்றன. கோ-ஆப்டெக்ஸில் சாதாரண ரகங்களைப் போலவே இந்த புடவையும் ரூ.3200 முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்பனையாகிறது.
ஆர்கானிக் புடவை தயாரித்தலில் பங்கேற்ற நெசவாளர் ஸ்வர்ணராஜ் கூறும்போது, ‘பாலியஸ்டர் கலப்புடன் கூடிய புடவைகளையே இதுவரை தயாரித்து வந்தோம். முதல் முறையாக இயற்கைப் பருத்தியில் நெய்வது பயத்தை ஏற்படுத்தியது. ஆனால், கூட்டுறவுச் சங்கத்தின் மீது இருந்த நம்பிக்கையால், முயற்சித்துப் பார்க்க களம் இறங்கினோம். வழக்கமாக செயற்கை சாயம் பூசிய நூலை நெய்யும்போது, எங்களுக்கு தோல் பிரச்சினைகள் ஏற்படும். கையுறைகளை அணிந்துதான் வேலை செய்ய வேண்டியிருக்கும். ஆனால், இயற்கை ரக புடவையில் எங்களுக்கு எந்த பாதிப்புமே இல்லை. எனவே நிச்சயமாக வெயிலுக்கு ஏற்ற, தோல் பிரச்சினைகளை ஏற்படுத்தாத உடையாக இது இருக்கும்’ என்றார்.
‘மாற்றம் ஏற்படும்’
ஸ்ரீநடராசர் பருத்தி கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்க மேலாளர் எம்.சக்திவேலிடம் பேசியபோது, ‘நெசவாளர்களின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் இந்த சாதனையை செய்திருக்க முடியாது. கோரா காட்டனைப் போல, இந்த ஆர்கானிக் காட்டன் புடவைக்கும் புவிசார் குறியீடு பெற வேண்டும். சாதாரண புடவை நெய்ய, 2 நாள் ஆகும். ஆர்கானிக் புடவைக்கு இரண்டரை நாள் தேவை. புதியதை சாதித்த திருப்தியை விட, இயற்கையான உடையை தயாரித்துக் கொடுத்ததில் மகிழ்ச்சி. இந்த ஆர்கானிக் பருத்தி, நெசவுத்தொழிலில் நிச்சயமாக ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும்’ என்றார்.
புதிய முயற்சி
கோவை மருதம் கோ- ஆப்டெக்ஸ் மேலாளர் நடராஜ் கூறுகையில், ‘அனைத்து மாநிலங் களிலும் கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன. ஆனால் கோ - ஆப்டெக்ஸ் மட்டுமே முதல்முறையாக இந்த இயற்கை ரகத்தை உருவாக்கியுள்ளது. 10 நாட்களில் 30 புடவைகள் விற்பனையாகியுள்ளன. வரும் காலத்தில் அனைத்து உடைகளுமே இயற்கை மூலப் பொருளில் வரும் வாய்ப்பும் உள்ளது. கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த புதிய புதிய முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது கோ-ஆப்டெக்ஸ்’ என்றார்.