Published : 04 Feb 2014 05:44 PM
Last Updated : 04 Feb 2014 05:44 PM

கூடங்குளம் அணு உலையை மூடுக: மதிமுக பொதுக்குழு வலியுறுத்தல்

கூடங்குளம் அணு உலையை நிரந்தரமாக மூட வேண்டும், இலங்கையில் பொதுவாக்கெடுப்பு தேவை, மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள், மதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன.

மதிமுகவின் 22-வது பொதுக்குழுக் கூட்டம், சென்னை அருகே வானகரத்தில் இன்று நடந்தது. மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில், பொதுச் செயலாளர் வைகோ முன்னிலையில், 1500 பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

பாஜகவுடன் கூட்டணி

எண்ணற்ற இமாலய ஊழல்களை, காங்கிரசின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செய்து உள்ளது. ஊழல் மென்மேலும் புரையோடி வரும் நிலை முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும்

நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியை ஆட்சி பீடத்தில் இருந்து அகற்றும் குறிக்கோளோடு, பாரதிய ஜனதா கட்சியுடன் செய்து கொள்ளும் தொகுதி உடன்பாடு அடிப்படையில் தேர்தலில் போட்டியிடவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றியை இலக்காகக் கொண்டு மக்கள் சக்தியைத் திரட்டவும் இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.

இலங்கையில் பொதுவாக்கெடுப்பு

2011, ஜூன் 1 ஆம் நாள் பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்சில் நடந்த ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநாட்டில்,

'இலங்கையில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்; அந்த வாக்கெடுப்பில், ஈழத்தில் உள்ள தமிழர்களும், தமிழ்நாட்டின் சிறப்பு முகாம்களில் வசிக்கும் ஈழத்தமிழர்களும் உலகின் பல நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களும் வாக்கு அளிக்க உரிய

ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்; அதற்கு ஐ.நா. மன்றம் முயற்சி எடுக்க வேண்டும்' என்று மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ முதன்முதலில் கோரிக்கை வைத்தார்கள். இந்த லட்சிய நோக்கத்தை நிறைவேற்ற, மறுமலர்ச்சி தி.மு.க. பொதுக்குழு உறுதி மேற்கொள்கிறது.

மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்!

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்திட காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்குமுறைக் குழுவை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும்.

காவிரி பாசனப்பகுதிகளில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். விவசாயப் பகுதிகளில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்.

விவசாயிகளின் எதிர்ப்பை அலட்சியம் செய்துவிட்டு, எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தைச் செயல்படுத்த முனையும் மத்திய அரசுக்கு இப்பொதுக்குழு கடும் கண்டனம் தெரிவிப்பதுடன், இத்திட்டத்தைக் கைவிட்டு, தேசிய நெடுஞ்சாலை வழியாக எரிவாயு கொண்டு செல்ல வேண்டும்.

கரும்பு, நெல் கொள்முதல் விலை

கரும்பு டன்னுக்கு வயல் விலையாக ரூ.3,500, நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,000, மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.15,000, மரவள்ளிக் கிழங்கு குவிண்டாலுக்கு ரூ.10,000 விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

முழு மதுவிலக்கு

ஆட்கொல்லிப் புற்று நோயாகத் திகழும் டாஸ்மாக் கடைகளை மூடி, உடனடியாக முழு மதுவிலக்குகை நடைமுறைப்படுத்த வேண்டும்.

கூடங்குளம் அணு உலையை மூடுக

இந்தியாவின் மின்சாரத் தேவையில், வெறும் மூன்று விழுக்காடு கூட அணுமின் உற்பத்தி இல்லை. ஆனால் இதற்காக, மனித உயிர்களைப் பணயம் வைக்க இந்திய அரசு முயற்சிக்கிறது. தென் தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு கூடங்குளம் அணு உலையை நிரந்தரமாக மூட வேண்டும்.

மீனவர் பிரச்சினை

இலங்கையின் அக்கிரமச் செயலுக்கும், அடாவடித்தனத்துக்கும் முடிவு கட்ட உறுதியான நடவடிக்கை எடுக்கக் கடமைப்பட்டுள்ள இந்திய அரசு, தமிழக மீனவர்கள் பிரச்சினையில் தொடர்ந்து மௌனம் சாதித்து வருவதற்கு கழகப் பொதுக்குழு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது.

கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும்

தமிழக மீனவர்களின் உயிரையும் உடைமையையும் பாதுகாக்க, கச்சத் தீவைத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக மக்கள் கோரி வரும் நிலையில், மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு இலங்கைக்குச் சாதகமான முறையில் செயல்பட்டு வருவதை, கழகப் பொதுக்குழு

வன்மையாகக் கண்டிப்பதுடன், நீதிமன்றங்களில் தாக்கல் செய்து உள்ள பதில் மனுக்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகின்றது.

தமிழ் ஆட்சி மொழி

தமிழ்நாட்டில் உயர்நீதிமன்றம் மற்றும் அனைத்து மத்திய அரசு நிறுவனங்களிலும் தமிழ்மொழியை அலுவல் மொழி ஆக்கிட வேண்டும்; மழலையர் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரையில் எல்லா நிலைக்கல்வியும் தாய்மொழி வாயிலாகவே இருத்தல் வேண்டும் என்பதை வலியுறுத்துவதுடன், இந்தியாவின் ஆட்சிமொழியாக தமிழ்மொழி அரியணை ஏறுவதற்கும் தொடர்ந்து பாடுபடுவது என இப்பொதுக்குழு தீர்மானிக்கின்றது.

இட ஒதுக்கீடு

தமிழக அரசின் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் நியமிக்கப்படவுள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பணி இடங்களுக்கும் இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்ற வேண்டும்.

மாநில அரசுக்களுக்கு அதிகாரம்

மாநிலங்களின் கல்வி உரிமையைப் பறித்து பொது அதிகாரப் பட்டியலில் சேர்த்ததால், மத்திய அரசு விரும்பியபடி எல்லாம் கல்விக் கொள்கையை மாநில அரசுகளின் மீது திணித்து வருகிறது. இந்தியாவின் ஒருமைப்பாடு என்பது உண்மையான கூட்டு ஆட்சி

மூலம்தான் உருவாகும். மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கி, மாநில சுயாட்சிக் கோட்பாட்டை உறுதிப்படுத்துவதின் மூலம் மட்டுமே, இந்தியாவின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியும்.

பிப்ரவரி 26

தமிழர்களின் அறப்போர்க் குரல் ஒலிக்க வேண்டிய தினமாக பிப்ரவரி 26 ஆம் தேதியை அறிவிக்க லண்டன் மாநகரிலும், புலம்பெயர் நாடுகளிலும் வாழும் தமிழர்கள் தீர்மானித்து உள்ளனர். எனவே, பிப்ரவரி 26 ஆம் தேதி, உலகம் எங்கிலும் தமிழர்களின் நீதிக்கான முழக்கம் வீறுகொண்டு எழட்டும். தாய்த் தமிழகத்திலும், நீதி கேட்கும் முழக்கம் விண்ணை எட்டட்டும். தலைநகர் சென்னையிலும், மாவட்ட, வட்டத் தலைநகரங்களிலும், நீதி கேட்கும் குரல் எட்டுத் திசையிலும் ஒலிக்கட்டும். ஈழத்தின் விடியலுக்காக, நீதி கிடைப்பதற்காக, நாம் ஒன்றுகூடிக் குரல் எழுப்ப இருக்கும் நிகழ்வில், கட்சிக் கொடிகளைத் தவிர்த்து பிப்ரவரி 26 இல் ஓங்கி சங்கநாதம் எழுப்புவது என்றும் இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x