

கொல்லிமலையில் 200 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் சென்னையைச் சேர்ந்த 4 பேர் பலியாகினர்.
சென்னை ஆவடியைச் சேர்ந் தவர் கண்ணதாசன் (57). இவர் ராணுவ வீரர்களுக்கு சீருடை தைத்துதரும் பணியில் ஈடுபட்டு வந்தார். இவரது மனைவி லதா (48). இவர்களது மகள் வைஷ்ணவி (19), மகன் ஆனந்த் விஷ்ணு (16).
கண்ணதாசன் தனது குடும்பத்தினர் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (60), இவரது மனைவி் ராஜலட்சுமி (47) ஆகியோருடன் காரில் நேற்று நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அரியூர் நாட்டில் உள்ள பெரியசாமி கோயிலுக்கு வந்தனர். சென்னை ஆவடியைச் சேர்ந்த சித்தார்த் (32) என்பவர் காரை ஓட்டி வந்தார்.
நேற்று மாலை 6 மணியளவில் அனைவரும் கொல்லிமலையில் இருந்து சென்னைக்கு காரில் புறப்பட்டனர். கார் சிறிது தூரம் வந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில், கண்ணதாசன், ஸ்ரீலதா, வைஷ்ணவி, விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஆனந்த் விஷ்ணு, ராஜலட்சுமி, சித்தார்த் ஆகிய மூவரும் நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து கொல்லிமலை வாழ வந்திநாடு போலீஸார் விசாரிக்கின்றனர்.