Published : 06 Mar 2015 03:03 PM
Last Updated : 06 Mar 2015 03:03 PM

மகாராஷ்டிரத்தில் மாட்டிறைச்சிக்குத் தடை... முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு ரத்து: திருமாவளவன் கண்டனம்

மகாராஷ்டிரத்தில் மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதற்கும், முஸ்லிம்களுக்கான 5 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளதற்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "இந்துத்துவத்தின் சோதனைக்கூடமாக குஜராத் மாநிலத்தை வைத்திருந்த அடிப்படைவாதிகள் இப்போது மகராஷ்டிர மாநிலத்தை அடுத்த சோதனைக்கூடமாக உருமாற்றி வருகிறார்கள்.

மாட்டிறைச்சி விற்பதற்கும் உண்பதற்கும் தடை விதித்திருப்பதோடு, மாட்டிறைச்சியை வைத்திருந்தால் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை என அந்த மாநிலத்தில் சட்டம் போடப்பட்டிருக்கிறது. ஒருவர் எதைச் சாப்பிடலாம் எதை சாப்பிடக்கூடாது என்பதை முடிவுசெய்யும் அதிகாரம் அரசாங்கத்துக்குக் கிடையாது. மக்களின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் இந்தச் சட்டத்துக்கு எப்படி குடியரசுத் தலைவர் அனுமதி வழங்கினார் எனத் தெரியவில்லை.

மாட்டிறைச்சி தடை விவகாரத்தால் எழுந்துள்ள கொந்தளிப்பு ஓய்வதற்கு முன்பே அடுத்த தாக்குதலை பாஜக அரசு தொடுத்துள்ளது. முஸ்லிம்களுக்கு கல்வியில் வழங்கப்பட்டு வந்த 5 சதவீத இடஒதுக்கீட்டை இப்போது அது ரத்து செய்திருக்கிறது. முஸ்லிம்களுக்கு கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கலாம் என மும்பை உயர் நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ள நிலையில், பாஜக அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது.

மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு மக்களவையில் பெரும்பான்மையைப் பெற்றிருந்த போதிலும் மாநிலங்களவையில் அதற்குப் பெரும்பான்மை இல்லை. அதனால் அவர்கள் விரும்புகிற சட்டங்களைக் கொண்டுவர முடியவில்லை. எனவே, பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் தனது சோதனைகளை செய்து பார்த்து 2017-ல் மாநிலங்களவையில் பெரும்பான்மை பெற்றதும் இந்தியா முழுமைக்கும் அந்தச் சட்டங்களைக் கொண்டுவரத் திட்டமிடுகிறார்கள்.

மகாத்மா புலேவும் புரட்சியாளர் அம்பேத்கரும் சீர்திருத்தப் பணிசெய்து செம்மைப்படுத்திய மாநிலத்தை இன்று மதவாதசக்திகள் தமது வேட்டைக்காடாக்கி வருகிறார்கள். சமூகநீதியை விரும்புவோர் இதனைச் சகித்துக் கொண்டிருக்கக் கூடாது.

தலித் இளைஞர்கள் ஆணவக் கொலைகளுக்கு ஆளாக்கப்படுவதைத் தடுக்கத் துப்பில்லாத மகராஷ்டிர பாஜக அரசு மாட்டிறைச்சிக்குத் தடை விதிப்பதும், முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டு உரிமையை ரத்து செய்வதும் கேலிக் கூத்து அல்லாமல் வேறு இல்லை. மகாராஷ்டிர அரசின் மதவெறிப் போக்குக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது" என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x