

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பின் மீதான மேல் முறையீடு விசாரணையில் சிறப்பு அரசு வழக்கறிஞராக பவானி சிங் நியமிக்கப்பட்டதை எதிர்த்து அன்பழகன் செய்திருந்த மனு மீதான விசாரணை நாளைய தினத்துக்கு (வியாழக்கிழமை) தள்ளிவைக்கப்பட்டது.
கர்நாடக உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் என்.குமார் மற்றும் பி.வீரப்பா ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு இந்த மனு வந்த போது, மனுவில் குறிப்பிட்ட பெயர்களில் தவறிருப்பதைச் சுட்டிக் காட்டி, அதைத் திருத்திக் கொண்டு வருமாறும் அறிவுறுத்தி விசாரணையை வியாழக்கிழமைக்கு தள்ளி வைத்தனர்.
சிறப்பு அரசு வழக்கறிஞராக பவானி சிங்கை நியமித்ததன் மீதான தமிழக அரசின் சட்ட எல்லைகளை கேள்விக்குட்படுத்தி அன்பழகன் செய்த மனு மீதான முந்தைய விசாரணையின் போது ஜனவரி 19-ஆம் தேதி நீதிபதி அளித்த உத்தரவில் உச்ச நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தியிருந்தார்.
அவரது உத்தரவையும் அன்பழகன் தற்போதைய மனுவில் கேள்விக்குட்படுத்தியுள்ளார்.
சுப்பிரமணியன் சுவாமி மனு
சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பின் மீதான ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு வழக்கில் தன்னையும் சேர்க்கவேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி செய்திருந்த மனு மீதான வாதங்களை கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வு நீதிபதி சி.ஆர்.குமாரசாமி இன்று கேட்டார்.
அப்போது ஜெயலலிதா சார்பு வழக்கறிஞர் குறுக்கிட்டு, முன்னதாக சிறப்பு நீதிமன்ற வழக்கு விசாரணைகளின் போது சுப்பிரமணியன் சுவாமி இடம்பெறவில்லை. என்று ஆட்சேபணை தெரிவித்தார்.
இதனையடுத்து நீதிபதி குமாரசாமி, சுப்பிரமணியன் சுவாமியின் மனு மீதான உத்தரவு நாளை பிறப்பிக்கப்படும் என்றார்.