Published : 23 Feb 2015 10:54 AM
Last Updated : 23 Feb 2015 10:54 AM

செம்மறி ஆடுகள் உயிரைப் பறிக்கும் நீல நாக்கு நோய்க்கு தடுப்பு மருந்து: தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை. சாதனை

தமிழகத்தில் பாரம்பரிய கால்நடையான செம்மறி ஆடுகளை தாக்கும் கொடிய நீல நாக்கு நோய்க்கு தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் தடுப்பூசி கண்டுபிடித்துள்ளது.

செம்மறி ஆடுகள் இறைச்சிக்காகவும், தோலுக்காகவும் வளர்க்கப்படுகின்றன. இந்தியாவில் 40-க்கும் மேற்பட்ட செம்மறி ஆட்டு இனங்கள் உள்ளன. தமிழகத்தில் கீழகரிசல், ராமநாதபுரம் வெள்ளை, கடிக்கரைசல், வேம்பூர், சென்னை சிவப்பு, மேச்சேரி உள்ளிட்ட 8 வகையான செம்மறி ஆடு இனங்கள் வளர்க்கப்படுகின்றன.

செம்மறி ஆடுகளை தாக்கக்கூடிய நோய்களில் மிகக்கொடியது நீலநாக்கு நோயாகும். இது ‘க்யூளி காய்ட்டஸ்’ எனும் வைரஸ் கொசுக்கள் கடிப்பதால் செம்மறி ஆடுகளுக்கு வேகமாக பரவுகிறது. அனைத்து இன செம்மறி ஆடுகளிலும், இந்த நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. வெள்ளாடுகளை இந்நோய் அதிகம் பாதிப்பதில்லை. மழைக்காலங்களில் குறிப்பாக அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் இந்நோய் தாக்குதல் அதிகம் காணப்படும்.

பருவ மழைக்கு பிந்தைய காலங்களிலும், கோடை காலத்தின் இறுதியிலும் இந்நோய் அதிகம் பரவ வாய்ப்புள்ளது. நீலநாக்கு நோயை ஏற்படுத்தும் வைரஸ் நச்சுயிரியில் 24 வகைகள் உள்ளன. இதில் பல வகையான நச்சுயிரிகள் ஒருங்கிணைந்து, ஆடுகளை தாக்குவதால் அனைத்து வகை நச்சுயிரிகளுக்கும் எதிரான திறன் கொண்ட தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது.

அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக இந்நோய் பாதித்த ஆடுகளில் இருந்து மற்ற ஆடுகளுக்கு பரவாமல் தடுக்க மட்டுமே முடிந்தது. நோய் பாதித்த ஆடுகள் தனிமைப்படுத்தப்பட்டு, வேப்பம் புண்ணாக்கு போடவும், இரவில் ஆடுகளின் மேல் வேப்ப எண்ணெய் தடவிவிடவும் கால்நடை துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கினர்.

இந்நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக் கப்படாமல் இருந்ததால், மழைக்காலத்தில் செம்மறி ஆடுகள் அதிகளவு இறந்தன.

இந்நிலையில், சென்னையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் நீலநாக்கு நோய்க்கு தற்போது தடுப்பூசி கண்டு பிடித்துள்ளது.

இதுகுறித்து திண்டுக்கல் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மையத் தலைவர் டாக்டர் பீர்முகமது கூறும்போது, நீலநாக்கு நோய் தாக்கிய ஆடுகளுக்கு கடுமையான காய்ச்சல், உதடு, மூக்கு மற்றும் வாய் பகுதியில் சிவந்த புண், வீக்கம் ஏற்படும். வாயில் இருந்து அதிகம் உமிழ்நீர் வடியும். இந்நோய் வந்த மூன்று நாளில் ஆடுகள் சாப்பிட முடியாமல் இறந்துவிடும். இளம் ஆடுகளில் இந்நோயால் இறப்பு விகிதம் அதிகளவு இருக்கும்.

மழை பெய்யும் இடங்களில் மட்டுமே செம்மறி ஆடுகளை வளர்க்க முடியும். ஆனால், மழை பெய்யும் பகுதியில் நீல நாக்கு நோய் அதிகம் பரவுவதால், இந்த ஆடு வளர்ப்புக்கு இந்நோய் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வந்தது.

தற்போது இந்நோயை தடுக்க, தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம், ‘ரக்சாபிடிவி’ என்ற தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்துள்ளது. இந்த தடுப்பூசியை ஆண்டுக்கு ஒருமுறை போட்டுக் கொண்டால் செம்மறி ஆடுகளுக்கு நீல நோக்கு நோய் கண்டிப்பாக வராது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x