

ஸ்ரீங்கம் தொகுதியில் அரசியல் கட்சியினர் கடந்த 25 நாட்களாக மேற்கொண்ட இடைத்தேர்தல் பிரச்சாரம் ஆடல், பாடல், கட்சியி னரின் ஆரவாரத்துடன் நேற்று மாலை நிறைவடைந்தது.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் கட்சியின் வேட்பாளர் என அறிவிக்கப்பட்ட நாள் முதல் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்தார் அதிமுக வேட் பாளர் எஸ்.வளர்மதி. இவருக்கு ஆதரவாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், இந்தியக் குடியரசுக் கட்சித் தலைவர் செ.கு.தமிழசரன் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த தமிழக அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏ-க்கள் தொகு தியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ராஜகோபுரம் முன்பு நேற்று இறுதிக்கட்ட பிரச்சாரம் நடைபெற்றது. அப்போது தொண் டர்கள் தாரை, தப்பட்டை முழங்க ஆடல், பாடலுடன் ஊர்வல மாக வந்தனர். இதில் அமைச் சர்கள் பழனியப்பன், எடப்பாடி பழனிச்சாமி, நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம் மற்றும் நடிகை விந்தியா, நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்
திமுக வேட்பாளர் என்.ஆனந்துக்காக கனிமொழி, நடிகர் வாசு விக்ரம், வாகை சந்திர சேகர், லியோனி உள்ளிட்டோர் வாக்கு சேகரித்தனர். பிப்.11 முதல் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு நேற்று மாலை ஸ்ரீரங்கம் தேவி கலையரங்கம் அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.
பாஜக வேட்பாளர் எம்.சுப்ர மணியத்துக்கு ஆதரவாக இல.கணேசன், தமிழிசை சவுந்தர ராஜன், ஹெச்.ராஜா ஆகியோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.அண்ணாதுரைக்கு ஆதரவாக டி.கே.ரங்கரஜான், ஜி.ராமகிருஷ்ணன், தா.பாண்டியன் உள்ளிட்டோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இதுதவிர களத்தில் உள்ள சுயேச்சை வேட்பாளர்களில் டிராபிக் ராமசாமி, தலித் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த ஆறுமுகம், மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தைச் சேர்ந்த என்.எஸ்.ஆறுமுகம் உள்ளிட்டோரும் நேற்று இறுதிக் கட்டப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.