

தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக, காங்கிரஸ், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அவையில் பேச அவைத்தலைவர் அனுமதி அளிக்காததால் வெளிநடப்பு செய்ததாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர்.
அவைக்கு வெளியில் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்.எல்.ஏ. துரைமுருகன், "சட்டப்பேரவையில் தொடர்ச்சியாக எதிர்க்கட்சியினருக்கு பேச்சுரிமை மறுக்கப்படுகிறது. இது ஆளும்கட்சியினர் அரசியலில் இன்னும் வளர வேண்டியுள்ளதையே உணர்த்துகிறது" என்றார்.
சபாநாயகர் விளக்கம்:
தமிழக சட்டப்பேரவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக தேமுதிக உறுப்பினர்கள் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
முதலில் சபாநாயகர், நடப்பு கூட்டத்தொடருக்கும், அடுத்த கூட்டத்தொடருக்கும் சஸ்பெண்ட் செய்ததாகவும். திமுக பொருளாளர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டதை தொடர்ந்து அவர்கள் மீதான நடவடிக்கை குறைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து சட்டப்பேரவையில் இன்று விளக்கம் அளித்த தனபால், சட்டப் பேரவையில் தேமுதிகவினர் நடந்த விதம் குறித்து வீடியோ காட்சிகளைப் பார்த்து நடவடிக்கை எடுக்க அவகாசம் தேவைப்படுவதால் நடவடிக்கையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதே தவிர, யாருடைய கோரிக்கையையும் ஏற்று திருத்தம் செய்யப்படவில்லை என்று கூறினார்.