

மத்திய அரசு உரிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்டம் முடக்கப்பட்டுள்ளது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கிராமப்புற மக்களிடையே நீண்டகாலமாக நிலவி வரும் வேலையில்லா திண்டாட்டத்தை போக்கும் வகையில் 2006-ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை காங்கிரஸ் அரசு கொண்டுவந்தது. இந்தத் திட்டத்தின்படி ஒரு நிதியாண்டில் குடும்பத்தில் ஒருவருக்கு 100 நாட்கள் வேலைவாய்ப்பை கட்டாயம் அளிக்க வேண்டும்.
இதன்மூலம் நாடு முழுவதும் ஆண்டுதோறும் 5 கோடி குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன. இதற்கு ஆண்டுதோறும் ரூ.34 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கிவருகிறது. இத்திட்டம் 60:40 என்ற விகிதத்தில் மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்போடு செயல்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் மத்தியில் பதவியேற்றுள்ள பாஜக அரசு, இத்திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.11 ஆயிரம் கோடியை குறைத்துள்ளது. 2014-15ம் ஆண்டில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ரூ.5 ஆயிரத்து 231 கோடி நிதியில், இதுவரை ரூ.2 ஆயிரத்து 800 கோடி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.2 ஆயிரத்து 431 கோடி நிதி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் 100 நாள் திட்டத்தின் செயல்பாடுகள் மிகப்பெரிய அளவில் முடக்கப்பட்டு மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.
அரசியல் உள்நோக்கத்தின் காரணமாக இத்திட்டத்துக்கு எதிராக செயல்பட்டு வரும் பாஜக அரசை எதிர்த்து அதிமுக குரல் எழுப்பப் போகிறதா அல்லது கைகட்டி வேடிக்கைப் பார்க்கப் போகிறதா? இத்திட்டத்துக்காக தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ரூ.2 ஆயிரத்து 431 கோடி நிதியை உடனடியாக மத்திய அரசு ஒதுக்க வேண்டும். இல்லையெனில், காங்கிரஸ் சார்பில் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு இளங்கோவன் தெரிவித்துள்ளார்.