Published : 09 Feb 2015 10:27 AM
Last Updated : 09 Feb 2015 10:27 AM

அழிந்து வரும் பறவையினங்களை பாதுகாக்க இனப்பெருக்க சட்ட விதிகளை தெளிவாக வரையறுக்க வேண்டும்: ‘இந்து’ என்.ராம் வலியுறுத்தல்

இந்தியாவில் பறவைகளை இனப்பெருக்கம் செய்யும் சட்ட விதிகளை தெளிவாக வரையறுக்க வேண்டும் என்று கஸ்தூரி அண்ட் சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் என்.ராம் தெரிவித்துள்ளார். இந்திய பறவைகள் நலச் சங்கம் சார்பில், பறவை ஆர்வலர்களுக்கான ‘பறவைகள் பராமரிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்’ சென்னை செனடாப் சாலையில் உள்ள கவின்கேர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் கஸ்தூரி அண்ட் சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் என்.ராம் கலந்து கொண்டு பேசியதாவது:

இந்நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வல்லுநர்கள், விலங்கின மருத்துவர்கள், பறவை ஆர்வலர்கள் பங்கேற்று தங்கள் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர். பறவை வளர்ப்பில் உள்ள பல்வேறு சிக்கல்களுக்கு இந்த நிகழ்ச்சியில் விடை கிடைத்துள்ளது.

இந்தியாவில் பறவைகளை இனப் பெருக்கம் செய்வதில் பலருக்கு ஆர்வம் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலேயே பெரிய அளவில் பறவைகளை இனப் பெருக்கம் செய்வித்தது விகடன் குழும முன்னாள் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன் தான். அவர் தனது பண்ணையில் 800 பறவைகளை பராமரித்து வந்தார். இந்த நிகழ்ச்சியில் அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

நம் நாட்டு பறவையான பச்சைக் கிளியை ஐரோப்பாவுக்கு மாவீரன் அலெக்சாண்டர் எடுத்துச் சென்றதாகவும், அவை பேசியதை அந்நாட்டு மக்கள் ரசித்ததாகவும் இலக்கி யங்களில் கூறப்பட்டுள்ளது. வன உயிரின சட்டப்படி பச்சைக் கிளியை உரிய அனுமதியின்றி தனி நபர் இனப்பெருக்கம் செய்ய முடியாது. வன உயிரின பூங்காக்களில் மட்டுமே செய்ய முடியும்.

அதனால் கழுத்தில் சிவப்பு வண்ண வளையம் போன்ற இறகுகளைக் கொண்ட ஆண் பச்சைக் கிளிகளை எங்கும் பார்க்க முடியவில்லை. புதிய வண்ணங்களில் கிளிகளை உருவாக்கவும் இந்தியாவில் முடிவதில்லை.

இது போன்ற பறவைகள் வனப் பகுதியில் இனப்பெருக்கம் செய்ய அவற்றுக்கு பல இடையூறுகள் ஏற்படுகின்றன. இதனால் பல பறவையினங்கள் அழிந்துவிட்டன. அழிந்து வரும் பறவையினங்களை பாது காக்க வேண்டிய கடமை பறவைகளை இனப்பெருக்கம் செய்விக்கும் ஆர்வலர் களுக்கு இருக்கிறது. அதற்கு வன உயிரின பாதுகாப்பு சட்ட விதிகள் தடையாக உள்ளன. அச்சட்டத்தை தெளிவாக வரையறுக்க வேண்டும்.

பறவைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க வன உயிரின பாதுகாப்புச் சட்டம் கட்டாயம் தேவை. அதே நேரத்தில் அறிவியல் பூர்வமாக தனி நபர் பறவைகளை இனப்பெருக்கம் செய்ய இச்சட்டம் தடையாக இருக்கிறது. வெளிநாடுகளில் பறவைகள் இனப் பெருக்கம் குறித்து, அந்நாட்டு வன உயிரின பாதுகாப்பு சட்டங்களில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்திய வன உயிரின சட்டத்தில் தெளிவு இல்லை.

இவ்வாறு என்.ராம் கூறினார்.

நிகழ்ச்சியில் சங்கத்தின் பொதுச் செயலர் அனில் கார்க், பறவை ஆர்வலர் ரங்கநாத், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பறவை இனப்பெருக்க வல்லுநர் டோனி சில்வா ஆகியோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x