

நடிகர் வடிவேலு வீட்டை முற்றுகையிட்ட தமிழ்நாடு தெலுங்கு மக்கள் பேரவையைச் சேர்ந்த 120 பேர் கைது செய்யப்பட்டனர்.
வடிவேலு இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘தெனாலிராமன்’ திரைப் படம் ஏப்ரல் 18 ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில், ‘தெனாலிராமன்’ படத்தில் மன்னர் கிருஷ்ணதேவராயரை இழிவுபடுத்தியிருப்பதாக கூறி சனிக்கிழமை காலை வடிவேலு வீட்டிற்கு அருகே தமிழ்நாடு தெலுங்கு மக்கள் பேரவை அமைப்பைச் சேர்ந்த 120 பேர் முற்றுகை போராட் டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து விருகம்பாக்கம் போலீஸார் அவர்களை கைது செய்து சென்னை, ஆர்காடு சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இதுகுறித்து தமிழ்நாடு தெலுங்கு மக்கள் பேரவைத் தலைவர் ஆர்.பாலகுருசாமி கூறுகையில், “படத்தை எங்களுக்கு திரையிட்டு காட்டி, அதில் தவறாகவும், காமெடியாகவும் காட்டப் பட்டிருக்கும் காட்சிகளை நீக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும். அடுத்தகட்டமாக திங்கள்கிழமை இந்தப் படத்திற்கு தடை கேட்டு நீதிமன்றத்தை நாட உள்ளோம்” என்றார்.