

திண்டுக்கல் அருகே கோனூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் மக்காச்சோளம் கார்ன் மாவு, ரொட்டி தயாரிப்புக்காக வடமாநிலங்களுக்கு அதிகளவு அனுப்பப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் பகுதியில் குறுகியகாலப் பயிரும், விவசாயிகளின் நண்பன் என்று அழைக்கப்படும் மக்காச்சோளம் பாரம்பரியமாக சாகுபடி செய்யப்படுகிறது. ரெட்டியார்சத்திரம், கோனூர், கரிசல்பட்டி, குட்டத்துப்பட்டி, குட்டத்து ஆவாரம்பட்டி, மயிலாப்பூர், சில்வார்பட்டி, அழகுபட்டி ஆகிய கிராமங்களில் 2 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர்.
இவற்றில் கோனூர் ஊராட்சி பகுதிகளில் பயிரிடப்படும் மக்காச்சோளத்துக்கு வடமாநிலங்களில் நல்ல வரவேற்பு உள்ளது. கடந்த 3 மாதத்துக்கு முன்பு மக்காச்சோளப் பயிரை பயிரிட்டிருந்த, இப்பகுதி விவசாயிகள் தற்போது அறுவடை செய்து வருகின்றனர்.
திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், மதுரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மொத்த வியாபாரிகள் நேரடியாக கோனூருக்கு வந்து, விவசாயிகளிடம் மக்காச்சோளத்தை கொள்முதல் செய்து வடமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். 100 கிலோ கொண்ட ஒரு மூட்டை மக்காச்சோளம் ரூ. 1,230-க்கு விற்கப்படுகிறது.
இதுகுறித்து விவசாயி ராமன் கூறும்போது, ‛‛மக்காச்சோளத்துக்கு தண்ணீர் அதிகம் தேவையில்லை. குறுகிய காலத்தில் அறுவடை, நிலையான விலை கிடைப்பதால், இப்பகுதியில் பாரம்பரியமாக சாகுபடி செய்து வருகிறோம். வடமாநில மக்கள் மக்காச்சோளத்தில் தோசை, ரொட்டி, பாப்கார்ன் உள்ளிட்ட விதவிதமான உணவுகளை செய்து சாப்பிடுகின்றனர். அவர்களுடைய அன்றாட உணவில் மக்காச்சோளம் முக்கிய இடம்பெற்றுள்ளது. கோனூரில் உற்பத்தி செய்யப்படும் மக்காச்சோளம் சுவையாக இருபப்தால், வடமாநிலங்களில் விரும்பி வாங்குகின்றனர் என்றார்.