ரூ.80 லட்சம் மதுபான பாட்டில்களுடன் லாரி சிக்கியது

ரூ.80 லட்சம் மதுபான பாட்டில்களுடன் லாரி சிக்கியது
Updated on
1 min read

வடக்கு கடற்கரை சாலையில் நடந்த வாகன சோதனையில் ரூ.80 லட்சம் மதுபான பாட்டில்களுடன் லாரி பிடிபட்டது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை வடக்கு கடற்கரை சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் புதன் கிழமை இரவு வாகன சோதனை நடத்தினர்.

அப்போது ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது 500 அட்டை பெட்டிகளில் ரூ.80 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு மதுபானங்கள் இருந்தன. லாரி ஓட்டுநரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரிடம் எந்த ஆவணங்களும் இல்லை என்பதும், சென்னையிலுள்ள ஒரு கப்பல் நிறுவனத்தில் இருந்து இந்த மதுபான பாட்டில்களை எடுத்து வருவதும் தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து மண்ணடி மூர் தெருவில் உள்ள பயர் மேக்ஸ் ஷிப்பிங் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கேயும் மதுபானங்கள் கொண்டு செல்வதற்கான ஆவணங்கள் இல்லை என்று கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து லாரியுடன் மதுபான பாட்டில்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் லாரியை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

வேப்பேரி ஜோதி வெங்கடாசலம் சாலையில் புதன் கிழமை மாலையில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் விரேந்திர ஜோடியா என்பவரது காரில் ரூ.15 லட்சம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர், வங்கியில் இருந்து பணம் எடுத்து வருவதாக கூறினார். வங்கிக்கு சென்று நடத்தப்பட்ட விசாரணையில் அது உண்மை என்று தெரியவந்தது. பின்னர் இந்த பணம் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதற்குரிய ஆவணங்கள் காட்டப்பட்டதை தொடர்ந்து ரூ.15 லட்சம் பணத்தை அதிகாரிகள் திருப்பி கொடுத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in