Published : 19 Feb 2015 06:14 PM
Last Updated : 19 Feb 2015 06:14 PM

சிவகங்கை பொறியியல் மாணவரின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரதம்- 11 யூனிட் மின் சக்தியில் 400 கி.மீ. செல்லலாம்

11 யூனிட் மின்சக்தியில் 400 கி.மீ. தூரம் ஓடும் வகையிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ‘ரதம்’ என்ற அதிநவீன வசதிகள் உடைய இருசக்கர வாகனத்தை பொறியியல் மாணவர் ஒருவர் உருவாக்கி உள்ளார்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மறவர் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் அமுதா. இவர்களின் இளைய மகன் மணிகண்டன் (21). இவர், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு பொறியியல் கல்வி (மெக்கானிக்கல்) படிக்கிறார்.

இவர், பிளஸ் 2 படித்தபோதே வாகன விபத்தை கட்டுப்படுத்தும் கருவி, பைக் திருட்டை தடுக்கும் கருவியை கண்டுபிடித்து ஆட்சியர், எஸ்பியிடம் பாராட்டு பெற்றுள்ளார்.

பொறியியல் படிப்பில் சேர்ந்த பின்னர், பெண்கள் தற்காத்துக் கொள்ளும் புதிய கருவியைக் கண்டுபிடித்தார்.

இந்நிலையில், எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ‘ரதம்’ என்ற அதிநவீன இருசக்கர வாகனத்தை உருவாக்கியுள்ளார். இதன் அறிமுக நிகழ்ச்சி நேற்று மானாமதுரையில் நடந்தது.

இதில் மாணவர் வி.ஆர். மணிகண்டன் பேசியது: ''வாகன எரிபொருளுக்கு அதிகம் செலவாகிறது. இதனால் மின்சாரத்தில் இயங்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ‘ரதம்’ தயாரித்துள்ளேன். இதில் மூன்றரை மணி நேரம் சார்ஜ் செய்தால், 11 யூனிட் மின்சாரம் பேட்டரியில் சேகரமாகும். இதன்மூலம், மணிக்கு 75 கிமீ வேகத்தில் சுமார் 400 கி.மீ. வரை பயணிக்கலாம். இதற்கான செலவு ரூ. 36 மட்டும்தான். பராமரிப்பு, தேய்மானம் இல்லை. இரைச்சல் இருக்காது. 300 கிலோ சுமையைத் தாங்கும்.

இந்த பைக்கில் விபத்தை அறிந்து தானாகவே தற்காத்துக் கொள்ளும் வசதி உள்ளது. மேலும் ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை எடுக்க முடியாது. பெற்றோரின் பேச்சை மீறி அதிக வேகத்தில் வாகனம் ஓட்டும் பிள்ளைகளுக்கு கடிவாளம் போடும் வசதியும் உள்ளது. ஜிபிஆர்எஸ் தொழில்நுட்பமும் உள்ளது. வாகனத்தில் ஏற்படும் பழுதுகளை மடிக்கணினி மூலம் இணைத்து உரிமையாளர்களே தெரிந்துகொள்ளும் வசதியும் உள்ளது. வாகனம் திருடுபோகாமல் தடுக்கும் வசதியும் உள்ளது.

ரதம் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 1 கி.மீ.க்கு 9 பைசாதான் செலவாகும். இந்த வாகனத்தை ரூ. 80 ஆயிரம் செலவில் தயாரிக்கலாம். அரசு மானியம் கிடைத்தால் விலையில் 30 சதவீதம் குறையும். சூரிய சக்தி மூலம் பேட்டரியை சார்ஜ் ஏற்றும் வசதியும் உள்ளது. ‘ரதம்’ ஸ்கூட்டரின் காப்புரிமை, விற்பனைக்காக புனேயில் உள்ள ஏர்ஏஐ-அமைப்பின் அனுமதிக்காக காத்திருக்கிறோம்'' என்றார். இவரது தொலைபேசி எண் 96889 15084.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x