

ஸ்ரீரங்கம் தொகுதியில் போலி வாக்காளர்களை நீக்கக் கோரி திமுக சார்பில் வழக்கு போடப்படும் என்று திமுக சட்டப்பிரிவு தலைவர் ஆர்.சண்முக சுந்தரம் கூறினார்.
திமுக சட்டப்பிரிவு நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் திமுக தலைமைக் கழக சட்ட ஆலோசகர் வி.என்.இளங்கோ, அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டப்பிரிவு தலைவர் ஆர்.சண்முகசுந்தரம், சட்டப்பிரிவு செயலாளர் இரா. கிரிராஜன் மற்றும் பலர் பங்கேற்றனர். இந்தக்கூட்டம் குறித்து திமுக சட்டப்பிரிவுத் தலைவர் ஆர்.சண்முக சுந்தரம் ‘தி இந்து’ விடம் கூறியதாவது:
திமுக சட்டப்பிரிவில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிர்வாகிகள் பங்கேற்கும் வகையில், இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் 9 ஆயிரம் போலி வாக்காளர்கள் உள்ளனர். இதனை நீக்க வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்துள்ளோம். போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம்.
மேலும் அதிமுக ஆட்சியில் நடைபெறும் முறைகேடுகள் குறித்தும் வழக்குகளை போடுவது என்று முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.