

பொதுமக்கள் குடிநீருக்காக குடங்களுடன் அல்லாடி வரும் வேளையில், சிவகங்கை நகரில் இரண்டு தலைமுறையாக 55 வயது முதியவர் ஒருவர் மாட்டு வண்டி மூலம் கடைகள், வீடுகளுக்கு குடிநீர் விற்பனை செய்து வருகிறார்.
சிவகங்கை நகர் நேரு பஜாரைச் சேர்ந்த அந்தோணி சாமியின் மகன் அருள் (55). அந்தோணிசாமி முன்னாள் ராணுவ வீரர். ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றபின், சிவகங்கையில் நிலவிய தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்கும் வகையில் மாட்டுவண்டிகள் மூலம் குடிநீர் விநியோகித்துள்ளார். அவ ருக்குப்பின் அவரது மகன் அருள் இத்தொழிலில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.
இது குறித்து அவர் கூறியதாவது: எனது தந்தை ராணுவ வீரர். அவர் ஓய்வுபெற்றபோது, தனுஷ்கோடி புயல் பாதித்த காலம். பரவலாக தண்ணீருக்கு தட்டுப்பாடு இருந்துள்ளது. சிவகங்கை செட்டி ஊருணி தண்ணீரை எடுத்து சிவகங்கை பகுதியில் உள்ள வீடுகள், கடைகளுக்கு விநியோகித்தார்.
சுமார் 100 வயது முடிந்த நிலையில், 5 ஆண்டுகளுக்கு முன்பு தான் இறந்தார். அவர் இறக்கும்போது எவ்வளவு கஷ்டம் வந்தாலும், தவித்த வாய்க்குத் தண்ணீர் கொடுக்கும் இந்த வேலையைத் தொடர வேண்டும் என்றார். அவரைத் தொடர்ந்து நானும் மாட்டுவண்டி மூலம் தண்ணீர் விநியோகிக்கிறேன்.
அக்காலத்தில் செட்டி ஊருணி தண்ணீர் என்றால் அவ்வளவு சுவையாக இருக்கும். தற்போது ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள செட்டி ஊருணியை கழிவுகள், குப்பைகள் கொட்டும் இடமாக மாற்றிவிட்டனர்.
எனது தந்தையைத் தொடர்ந்து சுமார் 30-க்கும் மேற்பட்டோர் மாட்டுவண்டியில் தண்ணீர் விநியோகித்தனர். காலப்போக்கில் இத்தொழிலில் இருந்து மாறி வேறு, வேறு வேலைக்குச் சென்றனர். ஆனால் நான் மட்டும் இத்தொழிலை தொடர்கிறேன்.
ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்ய ரூ. 80 மட்டுமே வசூலிக்கிறேன்.
நகராட்சியின் குடிநீரை பிடித்து கடைகள், வீடுகளுக்கு வழங்கி வருகிறேன். போதிய வருமானம் இல்லாததால், வாடகை வீட்டில் வசிக்கிறேன். வருமானத்தை எதிர்பார்ப்பதில்லை. குடிநீர் விநியோகிப்பதால் ஏற்படும் நிம்மதியே போதும் என்றார்.