

சட்டப்பேரவையில் கடந்த 19-ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் தேமுதிக உறுப்பினர் மோகன்ராஜ் பேசியபோது பெரும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து தேமுதிக உறுப்பினர்களை வெளியேற்றும்படி அவைக் காவலர்களுக்கு பேரவைத் தலைவர் ப.தனபால் உத்தரவிட்டார். பின்னர் பேரவை வராண்டாவில் அமர்ந்து தேமுதிக உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவைக் காவலரும், சிறப்பு உதவி ஆய்வாளருமான விஜயனை தாக்கியதாக தேமுதிக எம்எல்ஏக்கள் கே.தினகரன், சி.எச்.சேகர் உள்ளிட்டோர் மீது கோட்டை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றனர்.
இதற்கிடையே, எம்எல்ஏ மோகன்ராஜ் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி பி.தேவதாஸ், ‘‘சட்டப்பேரவை சம்பவம் தொடர்பாக மோகன்ராஜ் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறதா, இல்லையா என்பதை காவல்துறை தெளிவுபடுத்த வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.
இதையடுத்து கோட்டை காவல்நிலைய ஆய்வாளர் ரவிக்குமார் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘மோகன்ராஜ் மீது முதல் தகவல் அறிக்கை எதுவும் பதிவு செய்யப்படவில்லை’ என்று கூறப்பட்டிருந்தது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி பி.தேவதாஸ், வழக்கை முடித்துவைத்து நேற்று உத்தரவிட்டார்.