Published : 01 Feb 2015 17:10 pm

Updated : 01 Feb 2015 17:11 pm

 

Published : 01 Feb 2015 05:10 PM
Last Updated : 01 Feb 2015 05:11 PM

சிலம்பக் கலையை ஆய்வு செய்யும் புனே பல்கலைக்கழக மாணவர்கள்: தமிழக தற்காப்பு கலை வடக்கிலும் பரவ வாய்ப்பு

சிலம்பக்கலையை ஆய்வு செய்யும் நோக்கத்தோடு மதுரை வந்துள்ள புனே பல்கலைக்கழக மாணவர்கள், ஆர்வத்துடன் சிலம்பம் கற்று வருகின்றனர். இதனால் தமிழக சிலம்பக்கலை வடமாநிலங்களிலும் பரவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் அமைந்துள்ள பிளேம் பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் மாணவர்கள் இடையே ஆராய்ச்சி ரீதியான போட்டிகள் நடத்தப்படுகின்றன. அழியும் நிலையில் உள்ள கலைகள் குறித்த ஆய்வு இந்த ஆண்டுக்கான போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 10 முதல் 12 பேர் கொண்ட மாணவர்கள் குழு பல்வேறு மாநிலங்களுக்கு சென்றுள்ளது. ஆய்வுச் செல வாக ஒவ்வொரு குழுவுக் கும் தலா ரூ.1.20 லட்சம் நிதியை பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது.

இதில் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மாணவி பாவனா தலைமையிலான குழு சிலம்பக்கலை தொடர்பான ஆராய்ச்சிக்காக மதுரை வந்துள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சிவாக், யாஸ், சித்வான், ஜெய்தேவ், சூர்யா, மைல்ஸ், அர்ஜுன் ஆகிய மாணவர்களும், மேரிஅன், காயத்ரி, சுரின் ஆகிய மாணவிகளும் இக்குழுவில் இடம்பெற் றுள்ளனர்.

இதுபற்றி பாவனா, சிவாக் ஆகியோர் கூறியது: போட்டி அறிவிக்கப்பட்டதும் எதைப்பற்றி ஆய்வு செய்வது என்று எங்களுக்கு குழப்பம் ஏற்பட்டது. ஜப்பானை பூர்வீகமாக கொண்ட மாணவர் மைல்ஸ்தான் சிலம்பத்தை தேர்வு செய்யலாம் என்றார். காரணம் அவர் அந்நாட்டு தற்காப்புக் கலைகளை முறைப்படி பயின்றவர்.

சிலம்பக்கலை பற்றிய ஆராய்ச்சிக்கு எங்கு செல்லலாம் என்று இணையத்தில் அலசியபோது, மதுரைதான் அதற்கு உகந்த இடம் என்று தெரியவந்தது. காரணம், இங்கு தான் சிலம்பம் உயிரோட்டத்துடன் இருக்கிறது. அதுமட்டுமின்றி சிலம்பக்கலையில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றவரான மதுரை சாகுல்ஹமீது ஏற்கெனவே அதுபற்றி ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் என்றும் தெரிந்துகொண்டோம்.

நாங்கள் மதுரை வந்து 5 நாட்கள் ஆகின்றன. அதற்குள் சிலம்பம் பற்றி நிறைய தகவல்களை சேகரித்துள்ளோம். சாகுல்ஹமீதுவின் குருவான ஷேக் உஸ்மானையும் சந்தித்தோம். 70 வயதாகியும் கம்பீரமாக கம்பு சுற்றுகிறார். இதேபோல காமராசர் பல்கலைக்கழகம் அருகே உள்ள மீனாட்சிபட்டியிலும், விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள இருஞ்சிறை கிராமத்திலும் கள ஆய்வு செய்தோம். பெரியவர்கள் பலர் கம்பு சுற்றி காட்டியதுடன், அக்காலத்தில் அது எவ்வாறு தங்கள் வாழ்வோடு ஒன்றியிருந்தது என்றும் விளக்கினார்கள்.

இதை எல்லாம் எங்கள் குழுவைச் சேர்ந்தவர்கள் எழுத்தாகவும், புகைப்படம், வீடியோவாகவும் ஆவணப்படுத்தி உள்ளோம். இவற்றை புனேயில் உள்ள பல்கலைக்கழக கலையரங்கில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் திரையிட்டுக் காட்ட உள்ளோம். சில நுட்பமான விஷயங்களை செய்து காட்ட வேண்டிய அவசியம் இருக்கும் என்பதால் மைல்ஸ், அர்ஜூன், சுரின், சூர்யா ஆகிய 4 பேரும் இந்த குறுகிய காலத்தில் சிலம்பத்தை ஓரளவுக்கு கற்றுவிட்டனர். கண்டிப்பாக எங்களுக்கு முதல் பரிசு கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது. இந்தியாவின் மற்ற கலைகளை சிலம்பம் வெற்றி கொண்ட செய்தி விரைவில் உங்களை எட்டும்” என்று உற்சாகமாகத் தெரிவித்தனர்.

சிலம்ப பயிற்சியாளர் சாகுல்ஹமீது கூறியபோது, ‘சிலம்பக்கலையை இந்தியா முழுவதும் பரப்ப வேண்டும், அதனை ஆசிய மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறோம். சிலம்பத்தின் சிறப்பு பற்றி நாமே எடுத்துரைப்பது சில நேரங்களில் தற்புகழ்ச்சியாக கருதப்படுகிறது.

அதையே வடமாநில பல்கலைக்கழக மாணவர்கள் செய்தால் நல்ல பலன் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே, இவர்களது மதுரை வருகை சிலம்ப பயிற்சியாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது’ என்றார்.

இசைக்கருவியான வீணை தயாரிக்கும் கலை பற்றி ஆராய்ச்சி செய்ய ஒரு குழு தஞ்சாவூருக்கும், தோல்பாவை கூத்து மற்றும் பொம்மலாட்டம் பற்றிய ஆய்வுக்காக மற்றொரு குழு கேரளாவுக்கும் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிலம்பக் கலைசிலம்பக் கலை ஆய்வுபுனே பல்கலைக்கழக மாணவர்கள்தமிழக தற்காப்பு கலைவடக்கிலும் பரவ வாய்ப்பு

You May Like

More From This Category

More From this Author