Published : 28 Feb 2015 10:27 AM
Last Updated : 28 Feb 2015 10:27 AM

போலீஸ் கெடுபிடிகளை மீறி நடந்த தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சி

போலீஸ் கெடுபிடிகளை மீறி தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சியை பாரத் இந்து முன்னணி இயக்கத்தினர் நடத்தினர்.

திருவேற்காடு, புரசைவாக்கம், பட்டாளம், சூளை பகுதிகளில் இருந்து 40-க்கும் அதிகமானவர்கள் தாய் மதம் திரும்ப விருப்பம் தெரிவித்து இருப்பதாகவும், அவர்களை மதம் மாற்றி வரவேற்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் பாரிமுனை ஏகாம்பரேசுவரர் கோயிலில் நடைபெறும் என்றும் பாரத் இந்து முன்னணி சார்பில் அறிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளையும் அவர்கள் செய்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு போலீஸார் அனுமதி மறுத்து, கடுமையாக எச்சரித்தனர். மதம் மாற விருப்பம் தெரிவித்தவர்களின் பெயர் பட்டியலை சேகரித்து நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முந்தைய நாள் இரவே அவர்களின் வீடுகளுக்குச் சென்று போலீஸார் எச்சரித்தனர். பாரத் இந்து முன்னணி தலைவர் பிரபு வீடு சூளை தட்டான் குளத்தில் உள்ளது. நேற்று காலையிலேயே அவரது வீட்டுக்கு சென்ற போலீஸார் அவரை வீட்டுக்காவலில் வைத்தனர். அவரை வீட்டை விட்டு வெளியே செல்லவும், செல்போனில் பேசவும் அனுமதிக்கவில்லை. மேலும் சில நிர்வாகிகளும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

ஏகாம்பரேசுவரர் கோயிலிலும் போலீஸார் குவிந்து, நிகழ்ச்சியை நடத்தவிடாமல் பார்த்துக்கொண்டனர். இந்நிலையில் பாரத் இந்து முன்னணி இயக்கத்தை சேர்ந்த சில நிர்வாகிகள் போலீஸாருக்கு தெரியாமல் பெரம்பூர் அருகே பட்டாளத்தில் உள்ள பெரிய பாளையத்தம்மன் கோயிலில் தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சியை நடத்தினர். இதில் 2 பெண்கள் உட்பட 9 பேர் தாய் மதம் திரும்பினர்.

பாரத் இந்து முன்னணியினர் கூறுகையில், "40-க்கும் அதிகமானவர்கள் தாய் மதம் திரும்புவதாக இருந்தது. போலீஸாரின் கெடுபிடியால் பலர் வரவில்லை. நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. தாய் மதம் திரும்ப விருப்பம் உள்ளவர்களை கண்டுபிடித்து அதற்கான வழியை மட்டும் காண்பிக்கிறோம்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x