Last Updated : 10 Feb, 2015 10:22 AM

 

Published : 10 Feb 2015 10:22 AM
Last Updated : 10 Feb 2015 10:22 AM

4ஜி யுகத்தின் வாசலில்...

‘2ஜி’, ‘3ஜி’ யுகங்களைத் தொடர்ந்து வரும் ‘4ஜி’ தகவல் தொடர்பை மென்மேலும் மேம்படுத்தும்!

முக்காலி போட்டு, வீட்டுக் கூடத்திலே வைத்த நிலவழி (லேண்ட் லைன்) தொலைபேசி தான் முப்பது ஆண்டு முன்பு வரை புழக்கத்தில் இருந்தது. காரில் பொருத்தி பயன்படுத்தும்படியான நகரும் தொலைபேசியை அமெரிக்க கம்பெனியான மோட்டரோலா 1984-ல் விற்பனைக்கு வெளியிட்டது. அதுதான் முதல் தலைமுறை மொபைல் தொலைபேசி. தொடர்ந்து 1991-ல், முன்னேறிய தொழில்நுட்பத்தோடு, பின்லாந்தில் அறிமுகமானது இரண்டாம் தலைமுறை தொலைபேசி. பேச்சையும், குறுஞ்செய்திகளையும் (SMS) 0, 1 ஆகிய டிஜிட்டல் வடிவத்தில் எடுத்துப் போவது ‘2ஜி'-யில் தொடங்கியது. நம் நாட்டில் இன்று பரவலாகப் பயன்படுவது ‘2ஜி' தான்.

‘3ஜி' ஆகிய மூன்றாம் தலைமுறை மொபைல் சேவை 1998-ல் அறிமுகமானது. வினாடிக்கு 14 ‘மெகாபிட்' அதாவது பத்து கோடி துணுக்கு 0,1 வடிவில் ‘3ஜி’-யில் தகவல் அனுப்ப முடியும். இதில் ஆயிரத்தில் ஒரு பங்கு வேகம்கூட ‘2ஜி'-யில் வராது.

‘3ஜி' அதிவேகம் என்றால், அதைத் தொடர்ந்து, தென் கொரியாவில் 2007-ல் அறிமுகமான நாலாம் தலைமுறை மொபைல் சேவையான ‘4ஜி' மின்னல் வேகம். வினாடிக்கு 100 ‘மெகாபிட்'. அலைபேசியாக அதை அலைந்தபடி உபயோகிக்காமல், வீட்டில் இருந்தபடிக்கு பயன்படுத்தினால், 1 ‘கிகாபிட்' வேகமும் வசப்படும். அதாவது 100 'மெகாபிட்டை' விட 10 மடங்கு அதிகம்!

வேகம், படுவேகம்!

கணினியில்கூட இந்த வேகம் அண்மையில்தான் வந்தது. கூகுள் நிறுவனம் ஒரு ‘ஜிகாபிட்' இணையதள (இண்டர்நெட்) சேவையை அமெரிக்காவில் விரிவாக்கி வருகிறது. இந்த வேகம் மொபைல் தொலைபேசியில் கிடைக்க அது ‘ஐ.பி' என்ற இண்டர்நெட் தகவல் தொடர்புக்கு (IP-Internet Protocol) மாற வேண்டும். ஐ.பியை ‘இணைப் பில்லாத தகவல் தொடர்பு (connectionless protocol) என்பார்கள்.

ஒரே நேரத்தில் ஏகப்பட்ட இணைப்புகளை உருவாக்க, ‘4ஜி'-யில் எஃப்.டி.எம்.ஏ முறை (FDMA-Frequency Division Multiple Access) பெரும்பாலும் பயனாகும். நாலு பேர் உள்ள அறையில் இருவர் கீச்சுக் குரலிலும், இன்னும் இரண்டு பேர் கட்டைக் குரலிலும் பேசி ஒரே நேரத்தில் இரண்டு உரையாடல் நடத்துவது போன்றது என்று எஃப்.டி.எம்.ஏ.வுக்கு விளக்கம் சொல்லலாம். 2ஜி காலத்திலேயே எஃப்.டி.எம்.ஏ. வழக்கத்துக்கு வந்தது. ஆனால் ‘கிராஸ்- டாக்' பிரச்சினை எழுந்ததால் அது ஓரமாகக் கிடத்தப்பட்டது. இப்போது அதைத் தேடி எடுத்து வளப்படுத்தி ‘4ஜி'-க்கு பயன்படுத்துகிறார்கள். ஓ.எஃப்.டி.எம்.ஏ- என்று பெயரில் ஓர் எழுத்து அதிகம்.

எத்தனை பயன்பாடுகள்!

4ஜி முக்கியப் பயன்பாடு என்ன? இண்டர்நெட் மூலம் தொலைபேசும் வசதி (internet telephony) ‘4ஜி’ மூலம் பரவலாகும். தொலைபேசிக்காகத் தனியான கட்டணம் இன்றி எங்கும் எப்போதும் எவரையும் அழைத்துப் பேச, குரல்கள் துல்லியமாக இருக்க இது வழிசெய்யும். பளிச்சென்று முப்பரிமாண தொலைக்காட்சி ‘4ஜி’ மூலம் கிட்டும். ஒன்றுக்கு இரண்டாக ஒரே நேரத்தில் வீடியோ சந்திப்புகளை (video conferencing) ‘4ஜி’ கொண்டு நிகழ்த்தலாம். இதெல்லாம் கணினி மூலம் நிறைவேற்றப்படும் பணிகள். ‘4ஜி’ தொழில்நுட்பம் மூலம், இணையத்தைப் பயன்படுத்தி செல்போனும் இவற்றைச் செய்யும்.

4ஜி பயன்படக் கூடிய இன்னொரு துறை மருத்துவம். தொலை மருத்துவம் என்ற டெலிமெடிசின் இது. நோயாளி காஷ்மீரில் பனி படர்ந்த ஒரு கிராமத்தில் இருக்கிறார் என வைத்துக்கொள்வோம். அவரை, ஒரு ஸ்டெதாஸ்கோப்பை செல்போனில் இணைத்துப் பிடித்துக்கொள்ளச் சொல்லிவிட்டுச் சென்னையில் இருக்கும் இதயநோய் சிகிச்சை நிபுணர் தன் மொபைல் மூலம் பார்த்து, நாடித் துடிப்பைக் கேட்டு ஆராய்ந்து சிகிச்சை தரலாம்.

அமெரிக்கா 4ஜி-யை ராணுவத்துக்குப் பயன்படுத்த ஆர்வமாக இருக்கிறதாம். போர்க்களத்தில் இருக்கும் ராணுவ வீரர்கள் அடிபடும்போது அவர்களின் முழங்கால், தோள் என்று பழுதடைந்த பாகத்தை செல் போனில் எக்ஸ்ரே கருவியை இணைத்துப் படம் எடுத்து, டாக்டரின் செல்போனுக்கு உடனுக்குடன் அனுப்பி, அவர் ஆலோசனைப்படி சிகிச்சை அளித்து சோதனை செய்திருக்கிறார்களாம்.

‘என் 3ஜி செல்போனை தூக்கிப் போட்டுட்டு புதுசா 4ஜி போன் வாங்கணுமா?’ என வருத்தப்படும் வாலிப வயோதிக அன்பர்களுக்கு ஒரு நற்செய்தி- 3ஜி ஃபோனை மாற்றவே வேணாம். 4ஜி அதே தொலை பேசியில் பிரமாதமாக வேலை செய்யும்.

தற்போது வைமேக்ஸ் (WiMAX), எல்.டி.இ (LTE - Long Term Evolution) என்ற இரண்டு விதமான தர நிர்ணயங்களின் அடிப்படையில் 4ஜி மொபைல் சேவை பல நாடுகளில் கிடைக்கிறது. தென் கொரியாவில் அறிமுகமானது வைமேக்ஸ். அமெரிக்காவில் பரவலாக இருப்பது. நார்வே, சுவீடன் வழி வருவது எல்.டி.இ. நம் நாட்டிலும் எல்.டி.இ தான் 4ஜிக்கான வழிமுறையாக இருக்கும்.

இந்தியாவில் ‘4ஜி’!

இந்தியாவில் ஏர்டெல், ஏர்செல், ரிலையன்ஸ் மற்றும் அரசுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் ஆகியோர் 4ஜி சேவை அளிக்க முன்வந்திருக்கிறார்கள்.

ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோஃபைபர் என்ற பெயரில் மும்பை போன்ற பெருநகரங்களில் வசதி படைத்த அடுக்குமாடிக் குடியிருப்புகளில் 4-ஜி சேவையை அறிமுகப்படுத்துகிறது. ‘முதல் மூன்று மாதம் முற்றிலும் இலவசம்’ என அதிரடி விளம்பரங்களோடு களமிறங்குகிறது ரிலையன்ஸ். ‘உங்கள் கம்ப்யூட்டரில் தற்போதைய இணைப்பில் ஒரு சினிமா படத்தைத் தரவிறக்கம் (download) செய்ய 11 மணி நேரம் பிடிக்கும். எங்கள் 4-ஜியில் ஏழே நிமிடத்தில் காரியத்தைக் கனகச் சிதமாக முடித்து விடலாம்’ என்று நிறுவனத்தின் விளம்பரம் ஆசை காட்டுகிறது.

வேகமான அலை அகலத்தைப் பயன்படுத்த அரசு அனுமதி தேவை. ரிலையன்ஸ் 1,800 மெகாஹெட்ர்ஸ் ஸ்பெக்ட்ரம் அலைவரிசைப் பயன்பாட்டுக்கான உரிமத்தைக் கடந்த ஏலத்தில், ரூ.11,000 கோடிக்கு வாங்கியது. நம் நாட்டில் 22 தொலைத் தொடர்பு பகுதிகள் உண்டு. அவற்றில் 14 பகுதிகளில் இந்த உரிமம் நடப்பாகும். அங்கே எல்லாம் 4ஜி சேவை வழங்க இருக்கிறது ரிலையன்ஸ். இதற்காக ரூ. 70,000 கோடி விலை மதிப்புக்கு சாதனங்களை வாங்கியிருக்கிறது இந்த நிறுவனம். போட்டியாளரான ஏர்டெல் தங்கள் 4ஜி சேவைக்கு, 3ஜி-யை விடக் குறைவான கட்டணம் வசூலிக்கப் போவ தாகச் சொல்லி வாடிக்கையாளர்களை அழைக்கிறது.

தனியார் உபயோகத்துக்கு மட்டுமல்லாமல், அலுவலக, தொழிற்சாலைப் பணிகளுக்கும் பரவலாக 4ஜி பயன்படுத்தப்படும்போது, அந்த நிறுவனங்களின் தொலைத் தொடர்பு மற்றும் கணினி செலவு 30 விழுக்காடு வரை குறைய வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது. இந்த சேமிப்பு அந்த நிறுவனங்களின் லாபக் கணக்கில் கணிசமான தொகையாக வரவாகும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

வரும் மார்ச் மாதத்தில் நடைபெற உள்ள 3ஜி, 4ஜிக்கான ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் மூலமாக அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி வருமானம் எதிர்பார்க்கப்படுகிறது. வேறு யாருக்கு வருமானம் வரக்கூடும் என்று கேட்க வேண்டாம்.

- இரா.முருகன்,
‘விஸ்வரூபம்’ உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர்,
தொடர்புக்கு:eramurukan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x