Published : 09 Feb 2015 09:33 AM
Last Updated : 09 Feb 2015 09:33 AM

1,500 மாணவ, மாணவியர் பங்கேற்ற மாநில அளவிலான யோகாசன போட்டி

1,500 மாணவ, மாணவியர் பங்கேற்ற மாநில அளவிலான யோகா போட்டி நேற்று சென்னையில் நடைபெற்றது.

தமிழ்நாடு விளையாட்டு யோகாசன அமைப்பு, பத்மம் யோகா மற்றும் இயற்கை வாழ்வு வளர்ச்சி அறக்கட்டளை மற்றும் ஆனிமன் மேலாண்மை ஆகிய அமைப்புகள் கூட்டாக இணைந்து, மாநில அளவிலான யோகாசன போட்டியை நேற்று நடத்தின. சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், தமிழகம் முழுவதிலும் இருந்து மாணவ, மாணவியர் 1,500 பேர் பங்கேற்றனர். 6 முதல் 21 வயதுக்கு உட்பட்டவர்கள் பங்கேற்ற இப்போட்டி 16 பிரிவுகளாக நடைபெற்றது.

தனுராசனா, உஸ்த்ராசனா, லகுவஜ்ராசனா, கருடாசனா உள்பட 40-க்கும் மேற்பட்ட ஆசனங்களை மாணவர்கள் செய்து காட்டி அசத்தினர். மத்திய அமலாக்கத்துறை உதவி இயக்குநர் ஏ.சந்திரசேகரன், புதுச்சேரி யோகாசன சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஆனந்த பாலயோகி பவானி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கினர்.

மேலும், இந்நிகழ்ச்சியில் புதுவை யோகாஞ்சலி நாட்டியாலயம் பள்ளி இயக்குநர் மீனாட்சி தேவி பவானி அம்மா, பிரபல யோகாசன கலைஞர் ஆசனா ஆ.ஆண்டியப்பன் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு விளையாட்டு, யோகாசன அமைப்பின் பொதுச் செயலாளர் எம்.ரவி ஆறுமுகம், தலைவர் எம்.பாபு உள்ளிட்ட பல்வேறு யோகாசன பள்ளிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x