

தருமபுரி - மொரப்பூர் இடையே புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்துமாறு ரயில்வே அமைச்சரிடம் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நேரில் வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக பாமக தலைமை நிலையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பாமக இளைஞர் அணி தலைவரும், தருமபுரி தொகுதி எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ், டெல்லியில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவை அவரது அலுவலகத்தில் நேற்று சந்தித்தார். அப்போது, தருமபுரி - மொரப்பூர் இடையே புதிய ரயில்பாதை அமைக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்துமாறும், அதற்கான அறிவிப்பை வரும் ரயில்வே பட்ஜெட்டில் வெளியிடுமாறும் கேட்டுக்கொண்டார்.
தருமபுரிக்கும் சென்னைக்கும் இடையே ரயில் போக்குவரத்து வசதி இல்லாத நிலையில், இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் தருமபுரியை கோவை, சென்னை உள்ளிட்ட நகரங்களுடன் இணைக்க முடியும் என்பதை அன்புமணி சுட்டிக்காட்டினார்.
திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை, திண்டிவனம் - நகரி, அத்திப்பட்டு - புதூர், ஈரோடு - பழநி, சென்னை - மாமல்லபுரம் - கடலூர், மதுரை - தூத்துக்குடி, ஆவடி -பெரும்புதூர் - கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு - விழுப்புரம், திருவள்ளூர் - அரக்கோணம் 4-வது பாதை உள்ளிட்ட தமிழக ரயில்வே திட்டங்களுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யுமாறும் மத்திய அமைச்சரை அவர் கேட்டுக்கொண்டார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.