Published : 14 Feb 2015 08:10 PM
Last Updated : 14 Feb 2015 08:10 PM

நியூட்ரினோவை எதிர்த்து சேர்ந்தே போராடுவோம்: அச்சுதானந்தன் பதிலால் மகிழ்ந்த வைகோ

இன்று காலை கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள ஆலவாய் அரசு விருந்தினர் மாளிகையில், கேரளத்தின் முன்னாள் முதல்வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவருமான அச்சுதானந்தனை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்தார்.

இதுகுறித்து இன்று மதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், '' தமிழகத்தில் தேனி மாவட்டம் தேவாரம் பொட்டிப்புரத்தில் மத்திய அரசு அமைக்க இருக்கின்ற நியூட்ரினோ திட்டத்தால் தமிழகத்துக்கும் கேரளத்துக்கும் பெரும் கேடு ஏற்படும். தமிழ்நாடு அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. பொதுமக்கள் கருத்து கேட்கப்படவில்லை. இத்திட்டத்திற்கு இரண்டு கிலோ மீட்டர் அருகாமையிலேயே அமைந்துள்ள கேரள மாநில அரசின் ஒப்புதலையும் மத்திய அரசு கேட்கவில்லை.

முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து

அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள செர்பி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து 7500 கிலோ மீட்டர் கடந்து பொட்டிப்புரத்தில் அமைக்கத் திட்டமிடும் நியூட்ரினோ ஆய்வகத்திற்கு நியூட்ரான் துகள் கதிர்கள் செலுத்தப்படும்.

பொட்டிப்புரம் மலையில் பாறையைக் குடைந்து நீளவாட்டிலும், குறுக்குவாட்டிலும் சுரங்கங்கள் அமைத்து 50 ஆயிரம் டன் எடையுள்ள காந்தக் கல்லைப் பதித்து ஆய்வு நடத்தும் திட்டம் இது. ஏராளமான வெடிமருந்துகளால் பாறைகள் உடைக்கப்படுவதால், இடுக்கி மாவட்டத்துக்கும், தேனி மாவட்டத்துக்கும் ஆபத்து. குறிப்பாக 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடுக்கி அணைக்கும், 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முல்லைப் பெரியாறு அணைக்கும் மிகப்பெரும் அபாயம் ஏற்படும்.

யுனெஸ்கோ விதி

மேற்குத் தொடர்ச்சி மலைகளை வரலாற்றுச் சின்னமாக ஐ.நா.மன்றம் அறிவித்துள்ளது. அதனால், இம்மலைத் தொடரில் எந்தச் சேதத்தையும் ஏற்படுத்தக்கூடாது என்பது யுனெஸ்கோ விதியாகும்.

நிலம், நீர், காற்று மண்டலத்துக்கும் பெரும் தீங்கு ஏற்படும். குறிப்பாக விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாவார்கள். வெளியாகும் தூசு படலத்தால் சுவாச நோய்கள் ஏற்படும்.

இந்தச் சுரங்கங்களில் அணுக்கழிவுகளைக் கொட்டுவதற்குத் திட்டமிட்டு இருக்கிறார்கள். அசாம் மாநிலத்தில் எதிர்ப்பு ஏற்பட்டதால், பின்னர் தமிழகத்தின் நீலகிரி மாவட்ட மக்கள் எதிர்த்தால், இப்போது தேவாரம் பொட்டிப்புரத்தில் இத்திட்டத்தை அமைக்க மத்திய அரசு முடிவு எடுத்தது. இதில் சில பகாசுர கம்பெனிகளுக்கு கிரானைட் கற்கள் மூலம் கோடி கோடியாகக் கொள்ளையடிக்க வாய்ப்பு உள்ளது. அமெரிக்க அரசாங்கத்தைத் திருப்திபடுத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இத்திட்டத்திற்கு 1500 கோடி அனுமதி வழங்கி உள்ளார்.

வைகோ தாக்கல் செய்த ரிட் மனு

இத்திட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தான் ரிட் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், இத்திட்டத்தை நிறைவேற்றவிடாமல் தடுப்பதற்கு கடந்த 7 ஆம் தேதி முதலமைச்சர் உம்மன் சாண்டி அவர்களைச் சந்தித்தபோது, மாசு கட்டுப்பாடு வாரிய நிபுணர்களை ஆய்வு செய்ய ஏற்பாடு செய்வதாகக் கூறியதோடு, முன்னாள் முதல்வராகிய அச்சுதானந்தன் இதனைத் தொடக்கத்தில் இருந்து எதிர்க்கிறார் என்று தன்னிடம் கூறியதையும் அச்சுதானந்தனிடம் வைகோ தெரிவித்தார்.

இரண்டு மாநில மக்களும் இத்திட்டத்தைக் கடுமையாக எதிர்க்க வேண்டும். குறிப்பாக மார்க்சிÞட் தலைவர் அச்சுதானந்தன் கேரள மக்களுக்கு நிலைமையைக் கூறி கடுமையாக எதிர்த்தால் இத்திட்டத்தைத் தடுத்துவிடலாம் எனக் கூறி, இதுபற்றிய முழு விவரங்கள் அடங்கிய கோரிக்கை மனுவை அச்சுதானந்தனிடம் வைகோ கொடுத்தார்.

‘இத்திட்டத்தை எதிர்க்க வேண்டியது அவசியம்தான் என்றும், இதனை எதிர்த்து சேர்ந்தே போராடலாம்’ என்றும் அச்சுதானந்தன் கூறினார்.

'நியூட்ரினோ திட்டத்தைக் கேரள மாநிலம் எதிர்க்கும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறேன். தனது பயணத்தின் நோக்கம் நிறைவேறும்' என்றும் வைகோ கூறினார்.'' என மதிமுக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x