

கன்னியாகுமரியில் சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு குறித்த ஒலி, ஒளி காட்சிக் கூடம் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக முடங்கிக் கிடக்கிறது.
கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கும் வகையில் மத்திய அரசின் மெகா சுற்றுலா திட்டத்தில் கேளிக்கை பூங்கா, கடற்கரை பூங்கா, கடற்கரை நடைபாதை, சுனாமி பூங்கா, சுற்றுலா வரவேற்பு மையம், பூம்புகார் படகுத்துறை அருகே சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு ஒலி, ஒளி காட்சி திறந்தவெளிக் கூடம் போன்றவை ரூ. 14 கோடி செலவில் அமைக்கப்பட்டது.
கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் பாறையில் உள்ள கலைநயமிக்க விவேகானந்தர் மண்டபத்தை பார்த்து செல்கின்றனர். அதே போன்று, விவேகானந்தர் குறித்த வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகளை சுற்றுலாப் பயணிகள் அறிந்துகொள்ளும் வகையில் திறந்தவெளி ஒலி, ஒளி காட்சிக் கூடம் அமைக்கப்பட்டது. 700 பேர் வரை அமர்ந்து பார்க்கும் வசதியுள்ள இக்கூடத்தில் தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளில் ஒலி, ஒளி காட்சி காண்பிக்கப்பட்டது. இதற்கு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. பெரியவர்களுக்கு ரூ. 20, சிறியவர்களுக்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்பட்டது.
ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து நவீன வகையில் அமைக்கப்பட்ட இந்த ஒலி, ஒளி காட்சிக் கூடம், கடந்த 3 ஆண்டுகளாக செயல்பாடின்றி உள்ளது. இதை சீரமைக்க சுற்றுலா துறை நடவடிக்கை எடுக்கவில்லை.
இதுகுறித்து கன்னியாகுமரி வந்த சென்னை போரூரை சேர்ந்த சுற்றுலா பயணி ஜோசப்ராஜ் கூறும்போது, “ஒலி ஒளி காட்சிக் கூடம் செயல்படாமல் இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. அதை மீண்டும் திறப்பதற்கு சுற்றுலா துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.