

படித்த, வேலைவாய்ப்பற்ற 67 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் வகையில், பிப். 24-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் களை நடத்த ஊரக வளர்ச்சித் துறை ஏற்பாடு செய்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்:
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, இயக்குநர் கே.பாஸ்கரன், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநர் வி.அமுதவள்ளி உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். படித்த ஏழை, எளியவர்கள் 67 ஆயிரம் பேர் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகம் மற்றும் புது வாழ்வுத் திட்டம் மூலமாக தனியார் பங்களிப்புடன் வருகிற 24-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) அனைத்து மாவட்டத் தலைமையகங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி, நேரடி வேலை வழங்குவதென்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
முகாமில், 8-ம் வகுப்புக்கு மேல் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும், கணினி, கட்டுமானத் தொழில், ஓட்டுநர், மெக்கானிக், பின்னலாடை ஆகிய தொழில்களில் பயிற்சி பெற்றிருப்போருக்கு நிரந்தர வேலைவாய்ப்பும் வழங்கப்படும்.