

தமிழகத்தில் கடந்த 2006 முதல் இதுவரை நடந்த 17 இடைத்தேர்தல்களிலும் ஆளும்கட்சியே தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது.
கடந்த 1980 முதல் தமிழகத்தில் நடந்த பல்வேறு இடைத்தேர்தல்களில் ஒன்றிரண்டு இடங்களில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. ஆனால், 2006-க்கு பிறகு தமிழகத்தில் இடைத்தேர்தல் என்றால் ஆளும்கட்சி மட்டுமே வெற்றி பெறுவது என்ற நிலை உருவாகிவிட்டது. இதற்கு அரசு இயந்திரத்தை ஆளும்கட்சி தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதே காரணம் என எதிர்க்கட்சிகள் புகார் கூறிவருகின்றன. வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள், மது கொடுத்து ஓட்டு வாங்குவதாக ஒவ்வொரு தேர்தலின்போதும் பரவலான குற்றச்சாட்டு எழுகிறது.
கடந்த திமுக ஆட்சியில் நடந்த திருமங்கலம் இடைத்தேர்தலில்தான் ஓட்டுக் காக வாக்காளர்களுக்கு அதிகமான தொகை வழங்கப்பட்டது. அதுவே ‘திருமங்கலம் பார்முலா’ என்ற பெயரில் தொடர்கதையாகி விட்டது. அதன்பிறகு, பொதுத்தேர்தலிலும் இந்த நடைமுறையை கட்சிகள் பின்பற்றத் தொடங்கிவிட்டன. இடைத்தேர்தல் வந்தால் பண மழை பொழியும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டுவிட்டது.
தமிழகத்தில் கடந்த 1980 முதல் இன்று வரை மொத்தம் 49 இடைத்தேர்தல்கள் நடந்துள்ளன. இதில் 41-ல் ஆளுங்கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. மீதி 8 இடங்களில் எதிர்க்கட்சிகள் வென்றுள்ளன.கடந்த 2004-ல் அதிமுக ஆட்சியின்போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ராஜினாமா செய்ததால், மங்களூர் (தனி) தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் திமுக சார்பில் போட்டியிட்ட வெ.கணேசன் 61,956 வாக்குகள் பெற்று ஆளும் அதிமுக வேட்பாளரான கே.ராமலிங்கத்தை (48,070) வீழ்த்தி வெற்றி பெற்றார். தமிழகத்தில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றது இதுதான் கடைசி.
அதன்பிறகு நடந்த எல்லா இடைத்தேர்தல் களிலும் ஆளும்கட்சியே வெற்றி பெற்றுள்ளது. 2006 முதல் 2011 வரை நடந்த 11 இடைத் தேர்தல்களிலும் ஆளும்கட்சியான திமுகவும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸும் வெற்றி பெற்றன. 2011-ல் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் திருச்சி மேற்கு, சங்கரன்கோவில், புதுக்கோட்டை, ஏற்காடு, ஆலந்தூர் மற்றும் ரங்கம் என 6 இடைத் தேர்தல்கள் நடந்துள்ளன. எல்லா இடங்களிலும் ஆளும்கட்சியே வெற்றி பெற்றுள்ளது.
பொதுத் தேர்தலுக்குப் பிறகு காலியாகும் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தாமல், அந்த தொகுதியில் இரண்டாமிடம் பெற்றவரை எம்எல்ஏவாக அறிவிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி வருகிறார்.
பாஜகவினர் கூறும்போது, ‘‘குஜராத்தில் நடந்த இடைத்தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளது. பொதுவாக மாநிலக் கட்சி கள் ஆளும் மாநிலங்களில்தான் இடைத் தேர்தல் களில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெறுவ தில்லை’ என்றனர். முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபாலசுவாமியிடம் இது பற்றி கேட்டபோது, “தமிழகத்தில்தான் இப்படி நடக்கிறது. இதர மாநிலங்களில் இடைத் தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெறுவது தொடர்கிறது. முறைகேடுகள் மூலம் ஒரு கட்சி, இடைத்தேர்தலை வெல்லாமல் தடுப்பது இதர கட்சிகள் மற்றும் வாக்காளர்களின் பொறுப்பு. இடைத்தேர்தல் நடத்துவது ஜனநாயக மாண்பு’’ என்று தெரிவித்தார்.