

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் சிகிச்சைக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள 10 படுக்கைகள் கொண்ட சிறப்புப் பிரிவை நேற்று தமிழக மருத்துவக் கல்வி இயக்குநர் கீதாலட்சுமி பார்வையிட்டார்.அப்போது டெங்குக் காய்ச்சல் மற்றும் பன்றிக் காய்ச்சலுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், மருந்து இருப்பு குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் அளித்த பேட்டி:
பன்றிக் காய்ச்சலுக்காக தமிழகம் முழுவதும் மருந்து, மாத்திரைகள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. பன்றிக் காய்ச்சல் அல்லது டெங்கு காய்ச்சல் வந்தால், உடனடியாக மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ளவேண்டும். பன்றிக் காய்ச்சல் ‘ஏ’, ‘பி’, ‘சி’ என 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவு நோயாளிகள் அரசு மருத்துவமனையை அணுகி மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொண்டால் போதும். ‘சி’ பிரிவு நோயாளிகளுக்கு காய்ச்சல், தலைவலி, மூச்சுத்திணறல் அறிகுறிகள் ஏற்படும். அவர்கள் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து தங்கி சிகிச்சை பெற வேண்டும். முறையாக சிகிச்சை மேற்கொண்டால் உயிரிழப்பு ஏற்படாது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பன்றிக் காய்ச்சலுக்கான ‘டாமி ப்ளு’ மாத்திரை இலவசமாக வழங்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் பன்றிக் காய்ச்சல் நோயாளி களுக்கும் அரசு இலவசமாக ‘டாமி ப்ளு’ மாத்திரைகள் வழங்கத் தயாராக உள்ளது.
டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சை பெற வருவோர் குறித்து, உடனே அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதைக் கண்காணிக்க சிறப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன என்றார் கீதாலட்சுமி.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி டீன் (பொறுப்பு) பி.ஜி. சங்கர நாராயணன், நிலைய மருத்துவ அலுவலர் மனோகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.