

சென்னை அடையாறு ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில், 7 வயது சிறுவனுக்கு வலிப்பு நோய்க்கான சிக்கலான அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர்.
இதுகுறித்து ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் நரம்பியல் துறை சிறப்பு நிபுணர் டாக்டர் சதீஷ் குமார் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பெரியபாளையத்தைச் சேர்ந்த சேதுராமன் என்பவரின் மகன் ரித்திஷ். அவருக்கு ஒரு வயதாகும்போது திடீரென வலிப்பு நோய் வந்துள்ளது. தொடக்கத்தில் எப்போதாவது ஒருமுறை வந்த இந்த வலிப்பு நோய், ரித்திஷுக்கு மூன்றரை வயதான பிறகு தீவிரமடைந்தது. அடிக்கடி வலிப்பு வந்து கீழே விழுந்தார்.
15-க்கும் மேற்பட்ட மருத்துவர் களிடம் காண்பித்தும் ரித்திஷ் குணமடையவில்லை. இதைத் தொடர்ந்து எங்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நாங்கள் சோதித்துப் பார்த்ததில் ரித்திஷின் மூளையின் புறப்பகுதியில் இயல்பு பிறழ்ந்த வளர்ச்சி, மூளையின் வலது கோளத்தில் பரவலாக இருப்பது தெரியவந்தது. இது ‘கார்டிக்கல் டிஸ்ப்ளேசியா’ என்று அழைக்கப்படுகிறது. இதுதான் வலிப்பு நோய்க்கான முக்கிய காரணமாக இருந்தது.
பூரண குணம்
இதைத் தொடர்ந்து நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், வலிப்பு நோய்துறையைச் சேர்ந்த நிபுணர்கள் குழு, ரித்திஷுக்கு ‘ஹெமிஸ்பெரக்டமி’ என்ற அறுவைச் சிகிச்சையை வலது மூளைப் பகுதியில் செய்தனர். 9 மணிநேரம் நடைபெற்ற இந்த சிக்கலான அறுவைசிகிச்சைக்கு பிறகு ரித்திஷின் உடல்நிலை பூரணமாக குணமடைந்து விட்டது.
இவ்வாறு டாக்டர் சதீஷ்குமார் கூறினார்.