

சுகாதாரத் துறையில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்ப மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது குறித்து மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தெரிவித்திருப்பதாவது:
மாநகராட்சி பொது சுகாதாரத் துறையில் உள்ள 20 காலிபணியிடங்களை நிரப்ப மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திலிருந்து தகுதி வாய்ந்த நபர்கள் பட்டியல் பெறப்பட்டது. அவர்கள் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பதில் சரிவர கலந்து கொள்ளவில்லை. பணி நியமனம் செய்யப்பட்ட பின்னரும் பணியில் சேரவில்லை. எனவே, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் இளம் வயதுடைய மருத்துவர்களை பணி நியமனம் செய்யலாம். இதற்கான அரசாணை வேண்டி தமிழக அரசுக்கு செயற்குறிப்பு அனுப்பப்படும்.
இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
நேரடி நியமனம்: உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு வழங்கியுள்ள தீர்ப்பின்படி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் தகுதியான நபர்கள் பட்டியல் பெறுவதுடன் பத்திரிகைகளிலும் விளம்பரம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. எனவே, மாநகராட்சி பணி நியமனங்களில் தமிழக அரசு தெளிவுரை வழங்க வேண்டும் என்று மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஓய்வூதிய உயர்வு: வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெறுபவர்கள், ஓய்வு பெறும் தேதிக்கு அடுத்த நாள் ஊதிய உயர்வுக்கு தகுதியுடையவர்களாக இருந்தால், அவர்களுக்கு ஓய்வூதியம் பெறும் போது ஊதிய உயர்வு பொருந்தும் என்ற அரசாணையை சென்னை மாநகராட்சியில் அமல்படுத்த மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.