Published : 15 Feb 2015 10:42 AM
Last Updated : 15 Feb 2015 10:42 AM

மார்க்சிஸ்ட் மாநில மாநாடு: சென்னையில் நாளை தொடக்கம் - ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 4 நாள் மாநில மாநாடு, சென்னையில் நாளை தொடங்குகிறது. இதில் கட்சியின் தேசிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நேற்று கூறிய தாவது:

பெருந்துறை சிப்காட் தொழிற் பூங்காவில் ஆலை அமைத்து ஒரு நாளுக்கு 30 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுப்பதற்கு கோககோலா நிறுவனத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இது அப்பகுதியில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். ஏற்கெனவே திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கழிவுநீர் கலப்பால் தண்ணீர் மாசடைந்துள்ளது. எனவே, அந்த நிறுவனத்துக்கு அளித்துள்ள அனுமதியை மாநில அரசு ரத்து செய்ய வேண்டும். இந்த விவகாரம் குறித்து விவாதிக்க பெருந்துறையில் அனைத்துக்கட்சி கூட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தவுள்ளது.

மீத்தேன் திட்டத்துக்கு அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இத்திட் டம் குறித்து மாநில அரசு மவுன மாக இருப்பது சரியல்ல. ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் ஆளுங் கட்சியினர் பண பலம், அதிகார பலத்தை பயன்படுத்தினர். அங்கு நேர்மையான, வெளிப்படையான தேர்தல் நடக்கவில்லை.

மார்க்சிஸ்ட் கட்சியின் 21-வது மாநில மாநாடு, சென்னை காமராஜர் அரங்கத்தில் 16-ம் தேதி (நாளை) தொடங்கி 19-ம் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது. சுதந்திரப் போராட்ட வீரர் என்.சங்கரய்யா மாநாட்டு கொடியேற்றுகிறார். கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் தொடக்கவுரை ஆற்றுகிறார். இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வாழ்த்துரை வழங்குகிறார்.

பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் கடைபிடிக்கும் பொருளாதாரக் கொள்கைகளுக்கு மாற்று கொள்கைகளை முன்வைத்து மாநாட்டில் விவாதிக்கப்படும். சிறப்பு பொருளாதார மண்டலங்க ளில் வேலை இழப்பு, அரசுப் பள்ளிகள் மூடல், சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட பாதிப்புகளை மக்கள் சந்திக்கின்றனர். இத்தகைய தமிழக அரசியல் சூழல் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படும்.

கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர்கள் சீதாராம் யெச்சூரி, பிருந்தா காரத் உள்ளிட்ட பலர் மாநாட்டில் கலந்துகொள்கின்றனர். 19-ம் தேதி ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் பொது மாநாடு நடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x