Published : 20 Feb 2015 10:35 am

Updated : 20 Feb 2015 12:18 pm

 

Published : 20 Feb 2015 10:35 AM
Last Updated : 20 Feb 2015 12:18 PM

முலாயம் பேரன் திருமணத்தில் பங்கேற்கிறார் மோடி: அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி என புகார்

சமாஜ்வாதி கட்சித் தலைவரான முலாயம்சிங் யாதவின் பேரனது திருமண விழாவுக்கு நாளை உ.பி. செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க இருக்கும் நிலையில் இது அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி எனப் புகார் கிளம்பியுள்ளது.

முலாயம்சிங்கின் இளைய பேரன் தேஜ் பிரதாப்சிங் யாதவுக்கு, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவின் இளைய மகள் ராஜ லட்சுமியுடன் வரும் 26-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. விழாவின் ஒருபகுதியான மணப்பெண்ணுக்கு திலகம் இடும் நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உட்பட பல அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்களுக்கு முலாயம் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழகத்தில் நலுங்கு வைப்பது போலான இந்த விழா அழைப்பை ஏற்றுக்கொண்ட மோடி, நாளை முலாயமின் சொந்த கிராமமான சைபை செல்கிறார். இது அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி என எதிர்க் கட்சிகள் புகார் எழுப்பியுள்ளன.

இதுகுறித்து உத்தரப்பிரதேச சட்டப்பேரவை எதிர்க்கட்சித்தலை வரும் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்தவருமான சுவாமி பிரசாத் மவுர்யா கூறும்போது, `இருகட்சி களுக்கு இடையே உள்ள நெருக்கம் மேலும் வெளிச்சத்துக்கு வந்து விட்டது. நான்கு நாட்களுக்கு முன் பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷாவின் மகன் திருமணத் துக்கு முலாயம்சிங் சென்றிருந்தார். இது ஒரு திருமண நிகழ்ச்சி என்ப தால் இதற்கு மேல் கருத்து கூற விரும்பவில்லை’ எனத் தெரிவித்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் முலாயமின் சகோதரர் மகனும் எம்.பி.யுமான தர்மேந்தர் யாதவ் கூறும்போது, `எங்கள் தலைவருடன், மோடி உட்பட பல தலைவர்களுக்கு அரசியலுக்கு அப்பாற்பட்ட தனிப்பட்ட நட்பு உள்ளது. இதை தயவு செய்து அரசியல் ரீதியாகப் பார்க்க வேண்டாம்” என்றார்.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் திங்கள் முதல் நடைபெற உள்ள நிலையில், இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பு அரசியல் ரீதியாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில், மக்களவையில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி செய்யும் பாஜகவுக்கு, மாநிலங் களவையில் பெரும்பான்மை இல்லை. இதனால், எந்த ஒரு மசோதாவையும் நிறைவேற்ற எதிர்கட்சிகளையே சார்ந்திருக்க வேண்டிய நிலை நீடிக்கிறது. எனவே, இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதால் ஏற்படும் உறவு பாஜகவுக்கு அரசியல் பலனையும் அளிக்கும் என கருதப்படுகிறது.

காரணம், இதற்கு முன்பு 2003-ல் முலாயம்சிங்கின் முதலாவது மனைவி காலமான போது அவரது சைபை கிராமம் சென்று பாஜகவின் மூத்த தலைவர்கள் அதன் இறுதி சடங்குகளில் கலந்து கொண்டனர். வாஜ்பாய் ஆட்சி யில் வெளியுறவுத்துறை அமைச்ச கத்தில் இந்திய கவுன்சில்கள் மீதான ஒரு மசோதா, முலாயம் அளித்த ஆதரவால் ிறைவேற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பாஜகவுடன் முலாயமுக்கு உள்ள தனிப்பட்ட உறவை நிரூபிக்கும் வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் நடைபெற்ற அமித் ஷா மகனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முலாயம்சிங் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரே அரசியல் தலைவர் முலாயம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களவை தேர்தலில் இரு தொகுதிகளில் வென்ற முலாயம்சிங், அதில் மெயின்புரி தொகுதியில் ராஜினாமா செய்தார். அங்கு நடந்த இடைத்தேர்தலில் அவரது 26 வயது பேரன் பிரதாப்சிங் வென்று, அரசியலில் முதன்முறையாக நுழைந்தார். அவரை மாப்பிள்ளையாக்க கடந்த வருடம் நவம்பரில் முடிவு செய்து இருந்தார் லாலு.

பிஹாரில் இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. அப்போது பாஜகவை வீழ்த்த, ஜனதா கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து தேர்தலில் போட்டியிட முயற்சி மேற்கொண்டுள்ளன. இந்நிலையில் ஜனதா பரிவார் கட்சிகளை ஒன்றுசேர விடாமல் தடுக்கவே இந்த திருமணத்தில் மோடி பங்கேற்கிறார் என்று கூறப்படுகிறது.

முலாயம் சிங் பேரன்தேஜ் பிரதாப் சிங் திருமணம்மோடி பங்கேற்கிறார்அரசியல் ஆதாயம்

You May Like

More From This Category

More From this Author