

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 53 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர் என ஊரக தொழில் துறை அமைச்சர் மோகன் தெரிவித்தார்.
வேலைவாய்ப்பு அலுவலகம், வேலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியார் துறைகளில் ஆட்களை தேர்வு செய்ய சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் ஜோலார்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. இந்த முகாமில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் ஊரக தொழில் மற்றும் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் மோகன் கலந்துகொண்டு, பல்வேறு தொழில் நிறுவனங்களால் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
விழாவில் அவர் பேசும்போது, ‘‘கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2014-ம் ஆண்டு வரை 64 ஆயிரத்து 826 பேர், அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். வேலையில்லாத இளைஞர்களுக்கு தனியார் துறை மூலம் வேலைவாய்ப்பினை ஏற்படுத்த சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு முகாம்கள் வாயிலாக 52 ஆயிரத்து 794 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 5 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு சுமார் 16 கோடி ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும் 811 பயனாளிகளுக்கு ரூ.75.36 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.100 கோடி மானியத்துடன் கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது’’ என்றார். நிகழ்ச்சியில், தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆர்.நந்தகோபால், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அரசு செயலாளர் வீரசண்முகமணி, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் சமயமூர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.