

கல்விக் கடன் கிடைக்காததால் மருத்துவப் படிப்பை பாதியில் கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தருமபுரி மாணவி ஆட்சியரிடம் மனு அளித்தார்.
தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகேயுள்ள கிட்டம்பட்டி தண்டா பகுதியைச் சேர்ந்தவர் கவுசல்யா. இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் அரசு இட ஒதுக்கீட்டில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இவர் நேற்று தன் பெற்றோருடன் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
என்னுடைய மருத்துவப் படிப்பு செலவுக்கு ஆண்டுக்கு 5.75 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. தருமபுரி மாவட்டத்தில் வசிக்கும் லம்பாடி இனத்தவர்களில் இருந்து மருத்துவ படிப்பு வரை சென்ற முதல் மாணவி நான் தான். இந்நிலையில் படிப்பு செலவிற்காக கல்விக் கடன் கேட்டு பொம்மிடி இந்தியன் வங்கிக் கிளையில் 2013-ம் ஆண்டிலேயே விண்ணப்பித்தேன். இருப்பினும் இதுவரை எனக்கு கல்விக் கடன் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் தற்போது கட்டணம் செலுத்தாததைக் காரணம் காட்டி என்னை கல்லூரியில் இருந்து வெளியில் அனுப்பி விட்டனர். வங்கியில் கல்விக் கடன் கிடைத்தால் மட்டுமே எனது மருத்துவப் படிப்பை தொடர முடியும் என்ற நிலை உள்ளது. எனவே நான் கல்வியை தொடர உதவும் வகையில் வங்கிக் கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன், வங்கித் தரப்பில் பேசி கல்விக் கடன் கிடைக்க உடனடி நடவடிக்கை எடுப்பதாகவும், கல்லூரி தரப்பில் பேசி கால அவகாசம் பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்தார்.