Published : 17 Feb 2015 08:21 AM
Last Updated : 17 Feb 2015 08:21 AM

தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது: ஆளுநர் ரோசய்யா உரையாற்றுகிறார்

தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது. இதில் ஆளுநர் ரோசய்யா உரையாற்றுகிறார்.

நடப்பு ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை 11.15 மணிக்கு தொடங்குகிறது. இதில் ஆளுநர் ரோசய்யா உரையாற்றுகிறார். பேரவைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஆளுநர் ரோசய்யா காலை 11.10 மணிக்கு தலைமைச் செயலகத்துக்கு வருகிறார். சட்டப்பேரவை வாயிலில் அவரை பேரவைத் தலைவர் ப.தனபால், பேரவைச் செயலாளர் ஆகியோர் வரவேற்று அவைக்குள் அழைத்து வருவர். அவைக்குள் முதல்வர், அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று ஆளுநரை வரவேற்பர். பின்னர், பேரவைத் தலைவர் இருக்கையில் ஆளுநர் அமர்வார். அதைத் தொடர்ந்து அவை நிகழ்ச்சிகள் தொடங்கும்.

ஆளுநர் ரோசய்யா, தனது ஆங்கில உரையை படிப்பார். கடந்த ஆண்டில் அரசு நிறைவேற்றிய திட்டங்கள், சாதனைகள், புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் போன்றவை ஆளுநர் உரையில் இடம்பெறும். ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் ப.தனபால் வாசிப்பார்.

பேரவையின் முதல்நாள் கூட்டம் அத்துடன் முடிவடையும். அதன்பிறகு அலுவல் ஆய்வுக்குழு கூடி, கூட்டத்தொடரை எத்தனை நாள் நடத்துவது என்பதை முடிவு செய்யும். இதைத் தொடர்ந்து அவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசுவர். அதற்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துப் பேசுவார். அத்துடன் கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் பட்ஜெட் தாக்கலுக்காக மார்ச் மாதத்தில் கூடும் என தெரிகிறது.

கூட்டத்தொடர் தொடங்கு வதையடுத்து, பேரவையில் இருக்கைகளை சுத்தப்படுத்துதல், மைக் இணைப்புகளை சரிபார்த்தல், பேரவை அரங்குக்கு செல்லும் நுழைவாயிலில் சாமியானா பந்தல் அமைப்பது உள்ளிட்ட பணிகளில் பேரவை ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். சட்டப்பேரவை கூடுவதை முன்னிட்டு, சென்னை கோட்டை வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x