

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையேதான் போட்டி நிலவுகிறது என பாஜக தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்தார். திண்டுக்கல் மாநகராட்சி பாஜக கவுன்சிலர் தனபால் இல்ல நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
ஸ்ரீரங்கம் தொகுதியில் தேர்தல் அதிகாரிகள் ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். நியாயமான தேர்தல் அங்கு நடைபெறவில்லை. மாநில தேர்தல் ஆணையர் நேரடியாக அங்கு சென்றும் எந்த பலனும் ஏற்படவில்லை. ஆளும்கட்சியினர் வாக்குக்கு பணம், இலவச வேஷ்டி, சேலை ஆகியவற்றை வீடுவீடாக கொடுத்து வாக்கு சேகரிக்கின்றனர். ஸ்ரீரங்கத்தில் சொல்லப்போனால் அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையேதான் போட்டி நிலவுகிறது. 1967-ம் ஆண்டிலிருந்து ஆட்சி செய்த திராவிடக் கட்சிகளால் தமிழகம் அனைத்து துறைகளிலும் பின்தங்கியுள்ளது.
தமிழக அரசு தற்போது ரூ.4 லட்சம் கோடி கடனில் மூழ்கிக் கிடக்கிறது. இந்த சூழ்நிலையில் தமிழகத்தை பாஜகவால் மட்டுமே மீட்டு தூக்கி நிறுத்த முடியும். தமிழகத்தில் பாஜக வளர்ச்சியால் மாநில கட்சிகள் அச்சமடைந்துள்ளன.
நரேந்திர மோடிக்குத்தான் மக்கள் வாக்களிக்கின்றனர். அதனால் தேர்தல் கூட்டணியை பற்றி நாங்கள் கவலைப்பட போவதில்லை. பாஜகவின் அடிப்படை கொள்கைகளை அறிந்த கட்சிகள் மட்டும் கூட்டணியில் இருந்தால் போதும். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். இலங்கையில் தமிழ் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே அகதிகளை மத்திய அரசு அந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கும்.
ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. காங்கிரஸ் மதச்சார்பின்மை என்ற வாசகத்தின் மூலம் இந்து விரோத போக்கை கடைப்பிடிக்கிறது. இந்துக்கள் மதமாற்றம் செய்யப்பட்டபோது எந்த அரசியல் கட்சிகளும் வாய்திறக்கவில்லை. தற்போது தாய் மதத்துக்கு அவர்களாகவே திரும்பினால் கூச்சலிடுகின்றனர். கட்டாய மதமாற்றத்தை பாஜக ஒருபோதும் அனுமதிக்காது என்றார் அவர்.