

சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை (17-ம் தேதி) தொடங்கவுள்ள நிலையில், தேமுதிக எம்எல்ஏக்களுடன் விஜயகாந்த் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டுக்கான முதல் கூட்டத்தொடர் நாளை காலை 11.15 மணிக்கு ஆளுநர் ரோசய்யா உரையுடன் தொடங்குகிறது.
விஜயகாந்த் பங்கேற்பாரா?
இதில் தேமுதிக செயல்பாடு தொடர்பாக அக்கட்சி மூத்த நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘‘தற்போதுள்ள தமிழக அரசு செயல்படாமல் தான் இருக்கிறது. அறிவித்த திட்டங்கள் அறிவிப்போடு நிற்கிறது. இந்நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எந்தெந்த பிரச்சினைகளை கையில் எடுத்து பேசுவது என்பது தொடர்பாக எங்கள் கட்சி எம்எல்ஏக் களுடன் தலைவர் விஜயகாந்த் சென்னையில் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
கிரானைட் ஊழல், நீதிமன்ற தீர்ப்புகளை அமல்படுத்தாதது, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு, விவசாயிகள் பிரச்சினை, சென்னை சட்டக் கல்லூரியை இடம் மாற்றும் விவகாரம், மின்சார தட்டுப்பாடு, கிடப்பில் உள்ள திட்டப்பணிகள் உள்ளிட்டவை குறித்து பேசுவோம். கூட்டத்தொடரில் விஜயகாந்த் பங்கேற்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை’’ என்றனர்.