Published : 15 Feb 2015 10:22 AM
Last Updated : 15 Feb 2015 10:22 AM

‘ஜெனக்ஸ்ட் வெல்க்ரோ’ பாக்கெட் வேட்டி: ராம்ராஜ் நிறுவனம் அறிமுகம்

இளைஞர்களை ஈர்க்கும் விதத்தில், ஜெனக்ஸ்ட் வெல்க்ரோ பாக்கெட் வேட்டியை, ராம்ராஜ் நிறுவனம் திருப்பூரில் நேற்று அறிமுகப்படுத்தியது.

ஜெனக்ஸ்ட் வெல்க்ரோ பாக்கெட் வேட்டியை நேற்று அறிமுகப்படுத்தி, ராம்ராஜ் காட்டன் குழுமத் தலைவர் கே.ஆர். நாகராஜன், திருப்பூரில் செய்தியாளர் சந்திப்பில் கூறியது: காலத்தின் வேகமான வளர்ச்சிக்கேற்ப வேட்டி அணிவதில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில், பிரத்தியேக உத்திகளைக் கையாண்டு, தொடர்ந்து வேட்டி விற்பனையில் முன்னிலை வகித்து வருகிறது ராம்ராஜ் நிறுவனம். நடுத்தர வயதினர், சிறுவர்களுக்குக்கூட பல்வேறு வகையான வேட்டிகளை அறிமுகப்படுத்தி வெற்றி கண்டது.

இதன் அடுத்தகட்டமாக, ஜெனக்ஸ்ட் வெல்க்ரோ பாக்கெட் வேட்டிகளை அறிமுகப்படுத்துகிறோம். இளைஞர்களிடம் எடுக்கப்பட்ட சர்வேயில், இடுப்பில் வேட்டி நிற்பதில்லை, அடிக்கடி சரி செய்ய வேண்டியுள்ளது, பர்ஸ், செல்போன், கர்சீப் வைப்பதற்கு வசதியில்லை என்ற குறையை பலரும் தெரிவித்தனர்.

இதைக் கருத்தில்கொண்டு, வேட்டி அணிவதில் இளைஞர்களின் குறைகளை களையும் வகையில், புதிய வேட்டியை அறிமுகப்படுத்தியுள்ளோம். வேட்டியின் மேல் பகுதியில் வெல்க்ரோ இணைக்கப்பட்டுள்ளது. அவரவர் இடை அளவுக்கேற்ப வேட்டியை இறுக்கமாக அணிந்து கொள்ளலாம். மேலும், பர்ஸ் மற்றும் செல்போன்களை பாதுகாப்பாக வைக்கக் கூடிய அளவில் பாக்கெட்டும் வேட்டியுடனே இணைத்து, வெளியே தெரியாதவண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 6 ரகங்கள் உள்ளன. ரூ. 600 தொடங்கி ரூ. 800 வரை விற்கப்படுகிறது. ராம்ராஜ் நிறுவனத்தின் 55 ஷோரூம்களில் ஜெனக்ஸ்ட் வேட்டிகள் கிடைக்கின்றன.

தமிழகத்தின் பாரம்பரிய உடையை உலகம் முழுவதும் எடுத்துச்செல்ல ஆரம்பித்து 33 ஆண்டுகள் ஆகிறது. வியாபார நோக்கம் மட்டுமின்றி, அந்தஸ்து, மரியாதை கிடைக்கும் ஓர் ஆடையாக வேட்டியில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியுள்ளது ராம்ராஜ் என்றார்.

இந்நிகழ்வில், ராம்ராஜ் நிறுவனத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் செல்வகுமார், கணபதி உட்பட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x