Published : 11 Feb 2015 11:42 AM
Last Updated : 11 Feb 2015 11:42 AM

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்காக வெயில், மழை பாராது உழைக்கும் வட இந்திய தொழிலாளர்கள்: முறைப்படி ஊதியம், உணவு வழங்கப்படவில்லை என புகார்

சென்னை மெட்ரோ ரயில் திட்டத் துக்காக மழையையும், வெயிலை யும் பொருட்படுத்தாமல் நூற்றுக் கணக்கான வட இந்திய தொழிலா ளர்கள் உழைத்து வருகிறார்கள். எனினும் தங்களுக்கு முறைப்படி உணவு மற்றும் ஊதியம் வழங்கப்படுவதில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

சென்னையின் கனவு திட்டமான மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகளில் வட இந்திய தொழிலாளர்களே அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிஹார், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், அசாம் போன்ற மாநிலங்களிலிருந்து வந்துள்ள இவர்கள் நந்தம்பாக்கம், திருவேற்காடு, மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக குடியிருப்புகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சென்னையின் எதிர்கால போக்குவரத்து அமைப்பை உருவாக்கிக் கொண்டிருக்கும் இந்த தொழிலாளர்களின் வாழ்க்கை முறை எப்படி இருக் கிறது என்பதை அறிந்துகொள்ள அவர்களைச் சந்தித்தோம். (பேசியவர்களின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது)

குமார் (கூலித் தொழிலாளி):

நான் பிஹாரில் இருந்து இந்தப் பணிக்கு வந்துள்ளேன். எனக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளன. 6 மாதத்துக்கு ஒரு முறை ஊருக்கு செல்லும்போது ரூ.3000 ஆயிரம் கொடுப்பேன். காலையில் பணிக்குச் சென்றால் இரவு 9 மணிக்குதான் வீடு திரும்புவோம்.

ராஜ் (செக்யூரிட்டி ஊழியர்):

நான் அசாமில் லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்தேன். அங்கு தொடர்ந்து வேலை இருக்காது என்பதால் இந்த வேலைக்கு வந்தேன். பிஎப், கம்பெனி பிடிப்பு போக எனக்கு கிடைக்கும் சம்பளத்தில் இருந்து என் திருமணத்துக்காக மாதம் ரூ.1000 சேமிக்கிறேன். ஆரம்பத்தில் முறையாக ஊதியம் கொடுத்தவர்கள் தற்போது இழுத்தடித்துதான் சம்பளம் தருகிறார்கள்.

திலீபன் (தொழில்நுட்ப ஊழியர்):

உத்தரபிரதேசத்தில் இருந்து இங்கு வந்து பணியாற்றுகிறேன். எனக்கு மாத சம்பளமாக ரூ.20,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எங்களை அழைத்து வந்த நிறுவனம் கமிஷனாக குறிப்பிட்ட சதவீத தொகையை பெற்றுக் கொள்கிறது. மீதமுள்ள தொகைதான் எங்களுக்கு கிடைக்கிறது.

ராகவ் (கூலித் தொழிலாளி):

அசாமில் இருந்து இங்கு வந்து பணியாற்றுகிறேன். தினமும் ரூ.150 சம்பளம் கிடைக்கிறது. மேலும், உணவு, தங்கும் இடவசதி இலவசமாக கிடைக்கிறது. ஆனால், எங்களுக்கு தரப்படும் உணவின் தரம் குறைவாக உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து இவர்களின் மேற்பார்வையாளர் ஒருவரிடம் கேட்டபோது, “வட மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரம் தொழிலாளர்கள் மெட்ரோ ரயில் பணியில் ஈடுபடுகிறார்கள். தினமும் 12 மணிநேரம் வேலை பார்க்கும் அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப ரூ.5000 முதல் ரூ.30,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்றார்.

மெட்ரோ ரயில்வே நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் இதுபற்றி கூறும்போது, “சென்னை மெட்ரோ ரயில்வே பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு தற்காலிக குடியிருப்பு, தரமான குடிநீர், பாதுகாப்பு அம்சங்கள், விபத்து காப்பீடு, பாதுகாப்பு கருவிகள் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டுமென்று ஒப்பந்த தாரர்களை நாங்கள் வலியுறுத்து கிறோம்.

தொழிலாளர்கள் ஏதாவது புகார் அளித்தால் சம்பந்தப்பட்ட ஒப்பந்தாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x