

இட ஒதுக்கீட்டை அனைத்துத் துறைகளுக்கும் நீட்டிப்பதும், நடைமுறைப்படுத்துவதும் அவசர அவசியம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' இட ஒதுக்கீட்டால் திறமையோ, உற்பத்தித் திறனோ பாதிக்கப்படுவதில்லை என்று அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகம், தில்லி பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பொருளாதாரப்பிரிவு பேராசிரியர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. அதுமட்டுமின்றி, முடிவெடுக்கும் தன்மை கொண்ட உயர் பதவிகளில் இடஒதுக்கீட்டுப் பிரிவினர் நியமிக்கப்படும்போது, தங்களின் திறமையை நிரூபிப்பதற்காக மற்றவர்களை விட மிகச்சிறப்பாக செயல்படுவதாகவும் ஆய்வை நடத்திய பேராசிரியர்கள் கூறியுள்ளனர்.
முட்டுக்கட்டைகள் அகற்றப்படும்
உலகின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்திய தொடர்வண்டித்துறையில் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட தாக்கம் தொடர்பான ஆய்வில் இந்த உண்மை தெரியவந்துள்ளது. 1980 முதல் 2002 வரையிலான 22 ஆண்டுகளில், இந்தியத் தொடர்வண்டித்துறையில் ஏ, பி பிரிவுகளில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் அதிக அளவில் பணியாற்றிய இடங்களில் எட்டப்பட்ட உற்பத்தியையும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் குறைந்த அளவில் பணியாற்றிய இடங்களில் எட்டப்பட்ட உற்பத்தியையும் ஒப்பீடு செய்து இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. இதில் இடஒதுக்கீட்டுப் பிரிவினர் அதிகமாக பணியாற்றிய இடங்களில் சில அம்சங்களில் உற்பத்தித்திறன் அதிகரித்ததும் கண்டறியப்பட்டிருக்கிறது.
இடஒதுக்கீடு என்பது, தகுதியில்லாதவர்களுக்கு கல்வியையும், வேலைவாய்ப்பையும் வாரி வழங்கும் செயல்; இடஒதுக்கீட்டில் பணிக்கு வருபவர்களால் எதையும் சாதிக்க முடியாது என்ற பிரச்சாரத்தை திட்டமிட்டு செய்து வரும் சக்திகளுக்கு சம்மட்டி அடியாக இந்த ஆய்வு முடிவுகள் அமைந்திருக்கின்றன. சமூகப் பிரிவுகளின் அடிப்படையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்த மக்களுக்கு சமூக நீதி வழங்கும் நடவடிக்கைகள் இன்னும் முழுமை பெறவில்லை. இதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படும் போதெல்லாம், இட ஒதுக்கீட்டு இருக்குமிடத்தில் தகுதியும், திறமையும் இருக்காது என்று கூறி இம்முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடும் பணியை சில சக்திகள் செய்து வந்தன. அந்த முட்டுக்கட்டைகள் இந்த ஆய்வு முடிவுகளால் அகற்றப்படும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.
சமூக நீதி
இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு இந்திய மக்களுக்கு முழுமையான சமூக நீதியை வழங்க மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும். அனைத்துத் துறைகளிலும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சாதகமான நடவடிக்கைகளை மேற்கொள்வது தான் முழுமையான சமூக நீதி ஆகும். அமெரிக்கா, இங்கிலாந்து, அயர்லாந்து உள்ளிட்ட மேலை நாடுகளில் இட ஒதுக்கீடு என்பது தனியார் துறையையும் உள்ளடக்கியதாகவே உள்ளது. மலேசியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் உழவு முக்கியத் தொழிலாக இருப்பதால், அடித்தட்டு மக்களுக்கு வேளாண் விளைநிலங்களும் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. அந்த நாடுகளில் இடஒதுக்கீடு அர்ப்பணிப்பு உணர்வுடன் நடைமுறைப்படுத்தப் படுகிறது. இதனால் அந்நாடுகளின் வளர்ச்சி அதிகரித்து வருகிறதே தவிர ஒருபோதும் குறையவில்லை.
ஆனால், இந்தியாவில் நிலைமை தலைகீழாக உள்ளது. மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆகியும் அவர்களுக்கு 5% பிரதிநிதித்துவம் கூட கிடைக்கவில்லை. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைக்க வேண்டிய பணியிடங்களை சதி செய்து நிரப்பாமல் இருப்பதும், உயர்வகுப்பினரைக் கொண்டு நிரப்புவதும் தான் இதற்குக் காரணமாகும். இக்குறைபாடு சரி செய்யப்பட்டு, பிற பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு இடஒதுக்கீடு முழு அளவில் செயல்படுத்தப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.
அரசு மற்றும் பொதுத்துறை வேலைவாய்ப்புகள் பெருமளவில் குறைந்து விட்ட நிலையில், தனியார் துறையில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டிய காலகட்டம் வந்து விட்டது. தனியார்துறை இடஒதுக்கீட்டுக்காக முதன்முதலில் குரல் கொடுத்த கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான். தனியார் துறை இடஒதுக்கீட்டை வலியுறுத்தி 17 ஆண்டுகளுக்கு முன்பே 27.11.1998 அன்று சென்னை ஃபோர்டு மகிழுந்து நிறுவனம் முன் எனது தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. மராட்டியத்தில் தனியார் துறையில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முயற்சி மேற்கொண்டதற்காக அம்மாநில முதலமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவுக்கு சென்னையில் 23.08.2004 அன்று பாராட்டுவிழா மற்றும் கருத்தரங்கம் நடத்தினோம். தாங்களாகவே முன்வந்து தனியார் துறை வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவதாக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் நிறுவனங்கள் கூறிவரும் போதிலும் இன்று வரை அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இத்தகைய சூழலில் இனியும் தாமதிக்காமல் இதற்கான சட்டத்தை மத்திய அரசு உடனடியாக கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.
அதுமட்டுமின்றி, உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திலும் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசர அவசியமாகும். அத்துடன் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன பதவி உயர்வில் பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு, தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு ஆகியவற்றையும் நடைமுறைப்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும். இட ஒதுக்கீடு திறமையை பாதிக்காது என்ற ஆய்வு முடிவுகளை உணர்ந்து முழுமையான சமூக நீதி வழங்கும் நடவடிக்கைக்காக நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் உரக்க குரல் கொடுக்க வேண்டும்.'' என்று ராமதாஸ் தெரிவித்தார்.